Our Feeds


Friday, March 10, 2023

ShortTalk

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கு சரிவை சந்திக்கக்கூடும் - ஃபிட்ச் சொலியூஷன்ஸ்



(நா.தனுஜா)


அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஐந்தில் ஒருபங்கு இவ்வாண்டு இறுதியில் சரிவை சந்திக்கக்கூடுமென 'ஃபிட்ச் சொலியூஷன்ஸ்' எதிர்வுகூறியுள்ளது.

சீனாவின் நிதியியல் உத்தரவாதத்தைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வெகுவிரைவில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் 'இவ்வருடத்தில் இரண்டாம் காலாண்டில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறுமென நாம் நம்புகின்றோம்' என்று தெரிவித்துள்ள 'ஃபிட்ச் ரேட்டிங்' குழுமத்தின் ஓரங்கமான 'ஃபிட்ச் சொலியூஷன்ஸ்', சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்ளூராட்சிமன்றத்தேர்தல் ஆகியவற்றுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்துடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பேணுவதில் இலங்கை அரசாங்கம் சவால்கள் மற்றும் இடையூறுகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக வரி வீதங்களை அதிகரித்திருப்பதுடன், ரூபாவின் மீதான அழுத்தத்தைத் தளர்த்தியுள்ளது.

அதன்படி இலங்கை மீளச்செலுத்தவேண்டிய வெளியகக்கடன்கள் மீதமிருப்பதுடன், எதிர்வரும் சில மாதங்களில் அதன் வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இது நாணயணமாற்றுவீதத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் 'ஃபிட்ச் சொலியூஷன்ஸ்' தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் இறுக்கமாக்கப்பட்ட நாணய கொள்கையும் இலங்கை ரூபாவின்மீது அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும் என்று 'ஃபிட்ச் சொலியூஷன்ஸ்' எதிர்வுகூறியுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »