Our Feeds


Friday, March 17, 2023

SHAHNI RAMEES

இம்ரான் கானின் மனு தள்ளுபடி – விரைந்து கைது செய்ய பொலிஸாருக்கு பணிப்பு..!

 

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை  நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

 

இது குறித்து இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சட்டம் என்பது அனைவருக்கும் சமம். எனவே, இம்ரானை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை (மாா்ச் 18) ஆஜா்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றபோது, வெளிநாட்டுத் தலைவா்கள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருட்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதுதொடா்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை நீதிமன்றம் கடந்த மாதம். 28-ஆம் திகதி பிறப்பித்திருந்தது.

 

அந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 4-ஆவது முறையாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிா்த்தாா்.

 

பரிசுப் பொருள் முறைகேடு மட்டுமின்றி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், பரிசுப் பொருள் வழக்குக்காக வரும் 18-ஆம் திகதியும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குக்காக வரும் 21-ஆம் திகதியும் இம்ரான் கானை தங்கள் முன் பொலிஸார் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை கடந்த திங்கள்கிழமை பிறப்பித்தது.

 

எனினும், இம்ரானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் பொலிஸாருடன் இரு நாட்களாக கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »