Our Feeds


Sunday, March 12, 2023

ShortTalk

SLPP, MP க்களான தொலவத்த & ஷெஹானுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்.


 

(நா.தனுஜா)

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை மேற்கோள்காண்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் வெளியிடப்பட்ட கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவு தமக்குரிய (பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய) பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக கடந்த 7 ஆம் திகதி பிரேம்நாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பிரேம்நாத் தொலவத்தவின் கருத்து தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் முடிவடையும்வரை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடந்த 10 ஆம் திகதி சபாநாயகரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இவ்விரு கருத்துக்களும் நீதிமன்றச்செயன்முறையில் இடையூறு விளைவிப்பதுடன், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறக்கணிப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

இலங்கை மக்களைப் பொறுத்தமட்டில் சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பு இன்றியமையாதது என்பதுடன், நீதியை நிலைநாட்டுவதற்கு சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பு அவசியம் என்பதை அரசின் அனைத்துக் கிளைக்கட்டமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எனவே சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தலையீட்டையும் சட்டத்தின் ஆட்சி மற்றும் நாட்டுமக்களின் உரிமைகளை அவமதிக்கும் செயலாகவே கருதுகின்றோம்.

அத்தகைய அவமதிப்பு, எவ்வித பக்கச்சார்புமின்றி நீதியை நிலைநாட்டுவதற்கான நீதிமன்றத்தின் இயலுமையைப் பாதிக்கும்.

ஆகவே நாட்டின் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றோம் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »