Our Feeds


Tuesday, March 7, 2023

ShortTalk

Video: ஜனாதிபதி ரனில் கோமாளித்தனமாக செயல்படுகிறார் - தேர்தல் இல்லையெனில் ஜனாதிபதியின் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? - உதயகுமார் MP



“தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஒன்றில்லை” என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நாட்டில் தேர்தல் நடைபெறுமென அனைவருக்கும் தெரியும். நாட்டு ஜனாதிபதிக்கு தெரியாதா? ஜனாதிபதியின் செயல்பாடுகள் கோமாளித்தனமானதாக இருக்கிறது.  நடைபெறாத உள்ளாட்சித் தேர்தலுக்கு ஜனாதிபதியின் ஐ.தே.க வேட்பு மனு தாக்கல் செய்யது ஏன்? என தனியார் தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்ட த.மு.கூ பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.


குறித்த நிகழ்ச்சியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


தேர்தலுக்கான நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நிதியமைச்சிடம் கேட்ட போது தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு தங்களிடம் நிதி இல்லையென நிதி அமைச்சு பதிலளித்தது. உண்மையில் ஜனாதிபதி சொல்வதைப் போல் தேர்தல் ஒன்று இல்லையென்றால், இல்லாத தேர்தலுக்கு ஏன் நிதி வழங்க வேண்டுமென்றுதான் நிதி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கூறியிருக்க வேண்டுமே தவிர, தேர்தலுக்கு நிதியில்லை என கூறியிருக்கக் கூடாதே? எனவே, ஜனாதிபதியின் செயல்பாடுகள் ஒரு கோமாளித்தனமானதாக இருக்கிறது.


ஜனாதிபதி என்பவர் நாட்டின் முதல் குடிமகன், நாட்டின் தலைவர் அதற்கு ஏற்பவே அவர் செயல்பட வேண்டும். அவருடைய செயல்பாடுகளை பொறுத்தே நாட்டின் இமேஜ் உருவாகும். நாட்டின் தலைவரைப் பொருத்துத் தான் நாடு பலமடையும். ஆனால் இவரோ மக்கள் ஆணையை பெற்ற ஒரு தலைவரோ, ஜனாதிபதியோ அல்ல. பாராளுமன்ற தேர்தலில் கூட தோற்றுப்போய் மக்களினால் புறக்கனிக்கப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்து பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிதான் ரனில்.


எனவேதான் அவருக்கு தேர்தல் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஏனெனில் தேர்தல் ஒன்று நடைபெற்றால் ஜனாதிபதியும் அவர் சார்ந்த ஐ.தே.க கட்சியும் தோல்வியடையும் என்பது நிச்சயமாக அனைவருக்கும் தெரிந்த விவகாரம்.


எனவேதான் இந்தத் தேர்தலை நடத்தாமலிருக்க தேவையான அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபடுவார், ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். 


தற்போது அமெரிக்காவும் தேர்தல்கள் பிற்போடப்படக் கூடாது. தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெற வேண்டும் என கூறியிருக்கிறார். ஜனாதிபதியவர்கள் பாராளுமன்றத்தில் தேர்தலை பிற்போடுவது தொடர்பில் நகைச்சுவை பேச்சு பேசிவிட்டு சென்றதின் பின்னர் அடுத்த நாள் சர்வதேச அளவில் வெளிவந்த அனைத்து செய்திகளும் அவருக்கு எதிரானதாகவே இருந்தது. 


நம் நாட்டைப் போலவே பாகிஸ்தானிலும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கும் 4 மாகாண தேர்தல்களை நடத்த முடியாது, அதற்கு நிதியில்லை என அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


தேர்தல்கள் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. தேர்தல்கள் நடத்தப்படா விட்டால் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பெரும் அபகீர்த்தி ஏற்படும். என அவர் மேலும் தெரிவித்தார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »