Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர் யார்? நீதி அமைச்சரிடம் விமல் கேள்வி!



(இராஜதுரை ஹஷான்)


எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர் யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும். 

இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈட்டை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், 

2021ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் உயிரினங்களுக்கும், கடல் வளங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட முடியாது.

நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கையர் ஒருவருக்கு கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டள்ளதாகவும், நிதி வைப்பு செய்த வங்கிக் கணக்கு இலக்கம் வரை அறிந்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து ஒட்டுமொத்த கடல் வளத்தையும் தாக்கியுள்ளது. இந்த விடயத்தை வைத்தும் இலஞ்சம் பெறுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது. இலஞ்சம் பெற்றது யார் என்பதை பாராளுமன்றத்தின் ஊடாக நீதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தின் ஊடாக நஷ்ட ஈட்டினை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »