Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

மோசடிக்கு பெயர் போன ஒரு குடும்பம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா



(எம்.மனோசித்ரா)


இராஜதந்திர மட்டத்தில் ஊழல், மோசடிகள் அதியுயர் மட்டத்திலுள்ளன. இதன் காரணமாகவே இலங்கை வங்குரோத்தடைந்த நாடாகியுள்ளது. மோசடிக்கு பெயர் போன ஒரு குடும்பம் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தீவிர மாற்றத்துக்கான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாசத்திற்கான யாத்திரை கடந்த 19ஆம் திகதி நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து ஆரம்பமானது. யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆரம்பமான யாத்திரை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்தது. 

இதனையடுத்து கொழும்பில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடும் போது இதனைத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை தற்போது தோல்வியடைந்துள்ள அரசாகியுள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குள் பல தலைவர்கள் நாட்டை முன்னேற்றமடையச் செய்தனர். ஆனால் மேலும் சிலர் நாட்டை சீரழித்தனர். இறுதியாகப் பார்க்கும் போது நாம் முன்னோக்கிச் செல்லவில்லை. 75 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மை விட பன்மடங்கு பின்னோக்கியிருந்த பல தென்னாசிய நாடுகள் இன்று பிரம்மாண்ட வளர்ச்சியடைந்துள்ளன.

ஆனால் இன்று நாம் எங்கு இருக்கின்றோம்? இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணிய இளைஞர்கள் கடந்த ஆண்டு பாரிய போராட்டத்தினை முன்னெடுத்தனர். இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்தை அவர்கள் மாற்றிய போதிலும், அவர்களால் கோரப்பட்ட மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. ஒரு குடும்பத்தை மாத்திரம் ஒதுக்கி வைத்து விட்டு ஏனைய அனைவரும் அதிகாரத்தைப் இறுகப்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இராஜதந்திர மட்டத்தில் ஊழல் மோசடிகள் அதியுயர் மட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டு அரசாங்கத்தினாலேயே இலங்கை வங்குரோத்தடைந்த நாடு என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் தற்போதைய அரசாங்கத்தினால் அவசர பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளமைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான வரிசைகள் இல்லையென்ற போதிலும், சுமார் 15 இலட்சம் சிறுவர்கள் மந்த போசனையுடையவர்களாகவுள்ளனர். பெருமளவானோர் உண்ண உணவின்றியுள்ளனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். விவசாயத்துறை மேம்படுத்தப்படாமையின் காரணமாக வெளிநாடுகளிடம் உணவுக்காக கையேந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »