அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி (டிரிபிள் சுப்பர் பொஸ்பேட்) உரத்தை இதுவரைபெற்றுக்கொள்ளாத விவசாயிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த கமநல சேவை நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் திகதிக்குப் பின்னர் கமநல சேவை நிலையங்களில் உள்ள அனைத்து சேற்று உர தொகுதிகளும் பிரதான களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவை இணைந்து நாடு முழுவதிலும் உள்ள கமநல சேவை நிலையங்களுக்கு 36 ஆயிரம் மெற்றிக் தொன் ரிஎஸ்பி உர தொகுதிகளை விநியோகித்துள்ளன.
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான இலவச உரம் வழங்கும் நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்கள் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் ரிஎஸ்பி உரம் மற்றும் ஏனைய உரங்களின் விநியோகத்தின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
6 இலட்சத்து 77 ஆயிரத்து 139 விவசாயிகள் 22 ஆயிரத்து 644 மெற்றிக் தொன் உரத்தை பெரும் போகத்தில் இலவசமாகப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.