(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
உரம் தொடர்பில் கொள்கை மட்டத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்தால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.
ஸ்திரமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அமைப்பு பதவிகள் வழங்கப்படும் போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்க வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதே போல் பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
.jpg)