பொன்மாலைக்குடா காணி அபகரிப்பு தொடர்பான சர்ச்சை மற்றும் பாதுகாப்பு அதிகாரி பொதுமக்களுக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை தொடர்பாக நீதி அமைச்சருடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் கடந்த 1ம் திகதி பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி புத்தர் சிலையொன்று வைக்க முற்பட்ட போது பெரும் சர்ச்சை ஒன்று உருவானது.
குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாது காவலுடன் சென்றிருந்த வேலையில் பொது மக்களை மெய்பாதுகாவலர் துர்ப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக நேற்றைய தினம் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவும் வைரலாக பரவி வந்தது.
இது தொடர்பில் உடனடியாக செயல்பட்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்கள் குறித்த இடத்திற்கு பொலிசாரை அனுப்பிவைத்து நிலைமையை சுமுக நிலைக்குக் கொண்டுவருவதற்கு தேவையான முன்னெடுப்புகளை செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக இன்று காலை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை சந்தித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்கள் பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன் சமூகங்களுக்கு மத்தியில் சர்சைகள் தோற்றம்பெறாத வகையில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதி அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டிக் கொண்டார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் நாளைய தினம் (04.04.2023) நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருடன் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் AP முபாரக் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஆகியோர் நேரடியாக கலந்துரையாடி தீர்க்கமான ஒரு முடிவை எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்கள் ShortNews செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
MSD அதிகாரி பொதுமக்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ