சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு செல்வதாக போலியான செய்திகளை உருவாக்கி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப பணமில்லாத இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பணம் பெற முயற்சித்தாலும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பணமின்றி எதிர்க்கட்சிக்கு வர தயாராக இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பணத்துக்காக தங்கள் சுயமரியாதையை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
2020ல் இந்த நாட்டு மக்கள் 6 மாதமே ஆன ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க உதவினார்கள். எனவே 2000 இலட்சம் அல்லது அதற்கு மேல் கொடுத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தங்களது சுயமரியாதையை சலுகைகள் அல்லது வரப்பிரசாதங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்றும், ஒருபோதும் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவே 2000 இலட்சத்துக்காக அல்ல 50,000 கோடிக்கு முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரை தம் பக்கம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சவால் விடுவதாகவும், அப்படிப்பட்ட மக்களுக்கு துரோகிகளாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இதற்கான பணமாக கறுப்புப் பணமும், பண்டோரா காகிதப் பணமும் பயன்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களையும் தாக்கி, மின்சார கட்டணத்தை அதிகரித்து, வரிகளை அதிகரித்து, வட்டி வீதத்தை அதிகரித்து மக்களை ஒடுக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைப்பதுடன் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வருவதுடன் தொழிற்சங்க தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயற்சிக்கின்றனர்.
தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.