மஹர சிறைச்சாலையில் அதிகாரிகளை தாக்கி சிறைச்சாலையை சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெலிசர நீதிவான் இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது அதிகாரிகளை தாக்கி சிறைச்சாலையை சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெலிசர நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
போராட்டத்தின் போது சிறைக் கட்டடங்களுக்கு தீ வைத்ததன் மூலம் ஒரு கோடியே 74 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை கைதிகள் ஏற்படுத்தியதோடு, போராட்டத்தின் போது சிறையில் இருந்த சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களையும் அழித்துள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது சிறைச்சாலை கட்டடங்களுக்கு தீ வைத்து தாக்கியதன் மூலம் கைதிகள் கட்டடங்களுக்கும் உணவுப் பொருட்களுக்கும் சுமார் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையை நீதிவான் கவனத்தில் கொண்டுள்ளார்.