எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் (08) மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த தங்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று (09) செவ்வாய்க்கிழமை மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம் அதிகளவான பெற்றோர்களும் பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வருவதையும் மாணவர்கள் குழுக்களாக பயணிப்பதையும் வீதிகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் குறித்த கடத்தல் முயற்சி தொடர்பில் நேற்றைய தினம் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடத்தல் கும்பல் மற்றும் வாகனம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.