ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே நாட்டு மக்கள் ஆள்வதற்கான ஆணையை வழங்கினர். அதற்காக எமது கட்சியால் வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவாரானால் அரசியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிரணியில் அமரவுள்ளது என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”அடுத்த ஜனாதிபதியைக்கூட எமது கட்சிதான் வென்றெடுக்கும். எனவே, அரசியல் சூழ்ச்சி செய்வதற்கான எந்தவொரு தேவைப்பாடும் எமது கட்சிக்கு கிடையாது. வேட்பாளர் யார், வேலைத்திட்டம் என்ன உள்ளிட்ட விபரங்கள் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக முன்வைக்கப்படும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் ஆணை வழங்கினர். எம்மால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்துக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கினர். மக்கள் வழங்கிய ஆணையை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். மக்கள் ஆணைக்கு புறம்பாக – வேலைத்திட்டங்களுக்கு மாறாக ஜனாதிபதி தலைமையிலான அரசு பயணித்தால் மாற்று நடவடிக்கையில் நாம் இறங்குவோம். எனினும், அதற்கான தேவைப்பாடு இன்னும் ஏற்படவில்லை.
தற்போதைய அரசு, மக்கள் அங்கீகாரம் வழங்கிய வேலைத்திட்டத்தை எட்டி உதைக்க முற்பட்டால்தான் அவ்வாறானதொரு நிலை ஏற்படும்.” – என்றார்.