Our Feeds


Friday, June 2, 2023

ShortNews Admin

கல்முனை விவகாரத்தை நீங்கள் பொறுப்பேற்றால் இடையீட்டு மனுவை வாபஸ் பெற தயார் : மு.கா செயலாளர் நிஸாம் காரியப்பருக்கு மு.க பிரதித் தலைவர் ஹரீஸ் MP பகிரங்க சவால்!



மாளிகைக்காடு நிருபர் 


கல்முனை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள வழக்கில் பிரதிவாதிகளான பிரதமர், அமைச்சின் செயலாளர், அம்பாறை அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை உதவி பிரதேச செயலாளர் சார்பில் ஆஜராகும் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கை சரியாக கையாளும், இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித பாதிப்பும் வராமல் பாத்துக் கொள்ளும், இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவித பாதிப்பும் இந்த வழக்கினால் ஏற்படாது. 


இந்த வழக்கு தொடர்பில் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை, இந்த வழக்கு விடயத்தை நான் பொறுப்பெடுக்கிறேன், இந்த இடையீட்டு மனு அவசியமற்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றினூடாக இம்மாதம் 06ம் திகதிக்கு முன்னர் பொறுப்பேற்றால் இடையீட்டு மனுவை இவ்வாரமே வாபஸ் பெற தான் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், நிஸாம் காரியப்பருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். 


உள்ளூர் தனியார் ஊடகமொன்றுக்கு வியாழக்கிழமை இரவு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஹரீஸ், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க நாடகமாகவே ஹரீஸ் தாக்கல் செய்த மனுவே இந்த இடையீட்டு மனு என்று கூறும் நிசாம் காரியப்பர் அவர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்பும் விடயம் என்னவென்றால் நான் எதிர்க்கட்சி எம்.பி. கட்சித்தீர்மானங்களை ஏற்று கொள்பவன். 


கல்முனை அபிவிருத்தி குழு தலைவரும் நானல்ல. அந்த பதவி கூட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பிடம் இருக்கிறது என்ற நிலையில் எவ்வாறு நான் அரசுக்கு ஆதரவென்று கூற முடியும். நீங்கள் கூறுவது போன்று நான் அரசுக்கு ஆதரவாக இருக்க, கட்சி தீர்மானத்திலிருந்து தப்ப மில்லியன் கணக்கில்  செலவழித்து வழக்கு தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதை கூறிவைக்க விரும்புகிறேன். இது முட்டாள் தனமான கூற்றாகும் 


இராஜதந்திர உறவு, தமிழ்- முஸ்லிம் நல்லிணக்கம் பற்றியெல்லாம் பேசும் மு.கா செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எம்.ஏ. சுமந்திரனுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் நல்ல அந்நியோன்னிய உறவு இருக்கிறது. அதனை பயன்படுத்தி கல்முனை பிரச்சினைக்கு தீர்வை தான் பெற்றுத்தருவதாக பகிரங்க உறுதிப்பாட்டை வழங்கினால் கல்முனை முஸ்லிங்கள் எவ்வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக இருப்போம். 


கலையரசன் எம்.பி தாக்கல் செய்துள்ள வழக்கு முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் கலையரசன் எம்.பியின் தரப்பு வெல்ல முடியாது. இந்த மனுவில் பல ஓட்டைகள் இருக்கிறது. இதனை சட்டமா அதிபர் திணைக்களம் முழுமையாக பார்த்துக்கொள்ளும். சட்டமா அதிபர் திணைக்கள தரப்பின் வாதத்தை மீறி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் வெல்ல முடியாது. எனவே இதில் பயப்பட எதுவுமில்லை. சாதரண விடயம். எனவே இந்த வழக்கில் நான் இடையீடு செய்வது அவசியமற்ற விடயம் என்று நீங்கள் கூறி அதேநேரம் நான் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற அடிப்படியில் இந்த வழக்கினால் முஸ்லிம்களுக்கு எந்த பாதகமும் வராது என்ற உறுதிப்பாட்டை நீங்கள் 06ம் திகதிக்கு முன்னர் அறிவித்தால் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நாங்கள் இருவரும் அந்த மனுவை வாபஸ் பெற்று இந்த விவகாரத்திலிருந்து விலகி கொள்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பகிரங்க அறிவிப்பை உறுதிபட வெளியிட்டுள்ளார்.


நீங்கள் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டுள்ள “நாங்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் நாடகம், அவசியமற்றது. இது சாதரண விடயம்” என்ற உங்களின் நிலைப்பாடு  உண்மையென்றால் இம்மாதம் 06 ம் திகதிக்கு முன்னர் பகிரங்கமாக நீங்கள் பதில் தரவேண்டும் என்றும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தால் பாரதூரமான இந்த வழக்கு முஸ்லிம்களை சவாலுக்கு  உட்படுத்தியுள்ளது. இந்த இடையீட்டு மனு சரி என கருத்தில் கொள்ளப்பட்டு நீங்கள் தான் அரசியல் தேவைக்காக இந்த வழக்கு சாதாரண விடயம் என்று சொல்லி மக்களை குழப்பியதாக கருத்தில் கொள்ளப்படும் என்று நிஸாம் காரியப்பருக்கு தெரிவித்துள்ளார். 


தொடர்ந்தும் நீங்கள் மௌனம் சாதிப்பீர்களானால் எங்களின் அரசியல் நடவடிக்கைகள் மீது காழ்ப்புணர்ச்சி, பொறாமை காரணமாக இந்த வழக்கின் பாரதூரத்தை திசை திருப்பி மக்களை குழப்பி கல்முனையின் எதிர்காலம், நலனுக்கு எதிராக செயற்பட்டீர்கள் என்று கருத்தில் கொள்ளப்படும். ஆகவே கல்முனை நலனுக்கு இந்த இடையீட்டு மனு அவசியமா இல்லையா என்று 06 ம் திகதிக்கு முன்னர் பதில் தாருங்கள் என்று தொடர்ந்தும் கேட்டுக்கொண்டுள்ளார். 


மேலும், அந்த தேசிய தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு இன்னும் அழைப்பாணை கூட வழங்கவில்லை என்று இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றியோ அல்லது வழக்கின் நகர்வுகளை பற்றியோ அறியாமல் சகோதரர் நிஸாம் காரியப்பர் அவர்கள் கூறியிருக்கிறார். 


அது அவ்வாறல்ல பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டு பிரதிவாதிகளிடமிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு ஏப்ரல் 04 இல் இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு நடவடிக்கையின் போது நீதிமன்றம் இரு விடயங்களை கட்டளையிட்டியிருந்தது. அதில் ஏப்ரல் 28ம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பிப்பை வழங்குமாறு மனுதாரருக்கும் பிரதிவாதிகளான பிரதம அமைச்சர், அமைச்சின் செயலாளர், அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் சார்பில் ஆஜராகும் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணியான மனோகர ஜெயசிங்க ஆகியோருக்கு அறிவித்தது. 


இருதரப்பினர் சார்பிலும் எழுத்துமூல சமர்ப்பிப்பு நடைபெற்றுவிட்டது. மனுதாரரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு மே மாதம் 24ம் திகதி இடைக்கால தீர்வு வழங்குவது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்க இருந்ததாக எண்ணுகிறேன். இந்த வழக்கு நடவடிக்கை நகர்வுகளை அறியாமல் பொறுப்பற்ற விதத்தில் நிஸாம் காரியப்பர் அவர்கள் கருத்து தெரிவித்து மக்களை குழப்பியுள்ளார். காரணம் கல்முனையில் அக்கறை எடுத்து இந்த வழக்கு தொடர்பில் ஆவணங்களை பெற்று இந்த வழக்கு தொடர்பில் கல்முனை முஸ்லிம்களுக்கு உதவ அவர் முன்வராமையே அவர் மக்களை குழப்ப பிரதான காரணமாகும். 


அவருடைய குழப்பத்திற்கு காரணம் ஜனாதிபதி சட்டத்தரணியான நிசாம் காரியப்பர் அவர்கள் கல்முனை சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஒரு பிரச்சினை வந்தபோது கல்முனை மக்களின் நலனுக்காக ஓடோடி சென்று இந்த வழக்கு நடவடிக்கையில் பங்கெடுக்காமை தொடர்பில் கல்முனை மக்கள் அவரை குறை சொல்வதனாலும், கல்முனை மண்ணில் ஜனாதிபதி சட்டத்தரணி இருந்தும் நமக்கு அவர் கை கொடுக்கவில்லையே என்று மக்கள் பேசுவதனால் அவர் குழப்பமடைந்துள்ளார். குழப்பத்திலிருந்து விடுபட்டு நிதானமாக இருந்து எங்களின் சவாலுக்கான பதிலை வழங்குமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »