Our Feeds


Saturday, July 29, 2023

SHAHNI RAMEES

13 ஆவது திருத்த அமுலாக்கம் ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை : நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - கம்மன்பில

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து 13 இன் ஏனைய அம்சங்கள் பற்றி பேசுவதற்கு அழைப்பு விடுத்து விட்டு 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போது உள்ள தேசிய நல்லிணக்கம் இல்லாமல் போகும்.

பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாம். அதை விடுத்து காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது முரண்பாட்டை தோற்றுவிக்கும்.

13 ஆவது திருத்த அமுலாக்கம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது. தற்போதைய பாராளுமன்றத்துக்கும் மக்களாணை இல்லை,ஜனாதிபதிக்கும் மக்களாணை இல்லை. 13 தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கே உண்டு.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும். தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு சட்ட சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணலாம்.

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். 13 ஆவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அதை தவிர்த்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »