Our Feeds


Sunday, July 9, 2023

ShortNews

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதிவியிலிருந்து விலகி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி - அன்று நடந்தது என்ன?



வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக விரட்டியடித்த சம்பவம் நடந்தேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.


கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது. எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.


இதன் விளைவாக, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸவை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி விரட்டியிருந்தனர்.


இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உள்நாட்டு யுத்தம், குண்டு வெடிப்பு சம்பவங்கள், அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி எதிர்நோக்கியிருந்தது.


இந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக, ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


இவ்வாறான சூழ்நிலையில், உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருந்தது.


இந்த கொரோனா தொற்றானது இலங்கையை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தாக்கியது. இதையடுத்து, மார்ச் மாதம் 19ம் தேதி நாடு முடக்கப்பட்டது.


நாடு இவ்வாறு முடப்பட்டதை அடுத்து நாட்டின் சுற்றுலாத்துறை பூஜ்ஜியமானது. தேயிலை ஏற்றுமதி தடைப்பட்டது. ஆடை உற்பத்தி முழுமையாக தடைப்பட்டது. இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் முடங்கின. இது இறுதியில் இலங்கை என்றுமே சந்திக்காத ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.


இலங்கையில் மூடிய பொருளாதார கொள்கையை கொண்டு வந்த 70ம் ஆண்டு காலப் பகுதியில் வரிசை யுகம் காணப்பட்ட பின்னணியில், அதைவிடவும் பாரிய வரிசை யுகம் 2022ம் ஆண்டு ஏற்பட்டது.


எரிபொருள், எரிவாயு, அத்தியவாசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் பல நாட்கள் காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


நாளாந்தம் 15 மணித்தியாலங்களையும் தாண்டிய மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கியது. மருத்துவமனைகளின் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்வாறு மக்கள் நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்திருந்தார்கள்.


இவ்வாறு நெருக்கடிகளை சந்தித்த மக்கள், தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, நுகேகொடை - மிரிஹான பகுதியிலுள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.


சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த போராட்டம் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரை அதிகரித்து பாரிய போராட்டமாக உருவெடுத்தது.


இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு பிரிவினரால் கண்ணீர் புகை பிரயோகங்கள் நடத்தப்பட்டன. தடியடி பிரயோகம் நடத்தப்பட்டது. நீர்தாரை பிரயோகம் நடத்தப்பட்டன. எனினும், போராட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர்.


இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், நீர்தாரை பிரயோகம், தடியடி, கண்ணீர் புகை பிரயோகங்களில் பலர் காயமடைந்திருந்தனர்.


இந்த நிலையில், பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபா சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.


நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு உடன் அமலுக்கு வரும் வகையில் போலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.


மார்ச் மாதம் 31ம் தேதி மாலை ஆரம்பமான போராட்டம், அடுத்த நாள் அதிகாலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பாக வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.


இந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி பாரிய தன்னெழுச்சி போராட்டமாக மாற்றம் பெற்றது.


கொழும்பு - காலி முகத்திடலில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.


இந்த போராட்டத்தில் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு இரவிரவாக அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.


இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மே மாதம் 9ம் தேதி பாரிய வன்முறையாக உருவெடுத்தது.


பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்து, அங்கிருந்து வெளியில் வந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள் காலி முகத்திடலை நோக்கி படையெடுத்தனர்.


காலி முகத்திடலுக்கு வருகைத் தந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்திருந்தனர்.


அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை உடைத்து, அவற்றிற்கு தீ வைத்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.


இதையடுத்து, நாடு முழுவதும் வன்முறைகள் உருவாகியிருந்தன.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ராஜபக்ஸ ஆதரவாளர்களின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பாரிய சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.


இந்த வன்முறைகள் காரணமாக பத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.


அடுத்த நாள் வரை தொடர்ந்த போராட்டம், பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.


இந்த வன்முறைகளை அடுத்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதன் ஊடாக, முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.


இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.


இவ்வாறு தொடர் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், ஜுலை மாதம் 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகருக்குள் படையெடுத்து, போராட்டங்களை நடத்தியிருந்தனர்.


இதன்போது, ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.


அதேபோன்று, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகை ஆகியவற்றையும் போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு எடுத்தார்கள்.


இந்த நிலையில், தலைமறைவான கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தினர், விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் மாலைதீவு நோக்கி பயணித்து, அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்தனர்.


இவ்வாறு சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.


இதையடுத்து, ஜுலை மாதம் 15ம் தேதி பதில் ஜனாதிபதியாக, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார்.


அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.


ஜனாதிபதியாக பதவியேற்றத்தை தொடர்ந்து, காலி முகத்திடல் போராட்டத்தை கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.


இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவினரை, காலி முகத்திடலுக்கு அனுப்பி, போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டார்கள்.


இதையடுத்து, போராட்டக்காரர்களினால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அனைத்து அரச கட்டிடங்களும் மீள தமது பொறுப்பிற்கு எடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.


இதையடுத்து படிப்படியாக நிலைமையை வழமைக்கு கொண்டு வர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்ததுடன், கோட்டாபய ராஜபக்ஸவை மீள நாட்டிற்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.


சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து சென்று அங்கு வாழ்ந்து வந்த கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.


இந்த போராட்டம் காரணமாக ராஜபக்ஸ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ஸ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார். அதேபோன்று ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஸவும் பதவி விலகினார்.


நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் உறவினரான ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் தொடர்ந்தும் நேரடி அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.


ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராட்டத்தில் வெற்றி கொண்ட போதிலும், ராஜபக்ஸவின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவையும் பதவி விலகுமாறு தொடர்ந்தும் காலி முகத்திடல் போராட்டத்தை நடத்திய தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நன்றி: BBC தமிழ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »