Our Feeds


Tuesday, August 29, 2023

ShortNews Admin

நாளை தோன்றுகிறது சுப்பர் புளூ மூன் : மீண்டும் 14 வருடங்களின் பின்னரே வரும்



(ஆர்.சேதுராமன்)

நாளை புதன்கிழமை (30) சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. நாளைய தினத்துக்குப் பின் அடுத்த சுப்பர் புளூ மூன் 14 ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்கிறது நாசா.

சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும்,

ஒரே கலண்டர் மாதத்தில் 2 பௌர்ணமி தினங்கள் வந்தால், அந்த 2 ஆவது பௌர்ணமி புளூ மூன் என  அழைக்கப்படுகிறது.

புளூ மூன்

புளூ மூன் வருவதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் கிறகோரி நாட்காட்டியிலுள்ள (கலண்டர்) மாதத்துக்கும் சந்திரன் பூமியை வரும் காலத்துக்கும் இடையிலான வித்தியாசம்தான்.

பொதுவாக, மாதத்துக்கு ஒரு தடவை பௌர்ணமி தோன்றும். அதாவது, ஒரு வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள்.

சந்திரன் ஒரு தடவை பூமியை சுற்றி வருவதற்கு 29.5 நாட்கள் செல்லும். இதன்படி, 12 தடவைகள் பௌர்ணமி (முழு நிலவு) ஏற்படுவதற்கு 354 நாட்கள் செல்லும்.

ஆனால், நாம் பயன்படுத்தும் கிறகோரியன் நாட்காட்டியில் 365 தினங்கள் உள்ளன. எனவே ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகளுக்கு உரிய காலத்தைவிட மேலும் சுமார் 11 நாட்கள் எஞ்சியிருக்கும். இதனால் ஏறத்தாழ 3 வருடங்களுக்கு ஒரு தடவை, ஒரே மாதத்தில் இரு பௌர்ணமிகள் ஏற்படலாம். இதுவே புளூ மூன் (நீல நிலவு) என அழைக்கப்படுகிறது.

கடந்த 1 ஆம் திகதியும் பௌர்ணமி தினம் வந்தது. இம்மாதம் நாளை 2 ஆவது தடவையாக பௌர்ணமி தினம் வருவதால் அது புளூ மூன் ஆகிறது.

2018 ஆம் ஆண்டில் ஜனவரி, மார்ச் மாதங்களில் இரு தடவைகள் புளூ மூன்கள் வந்தன. இறுதியாக 2020 ஆம் ஆண்டில் புளூ மூன் ஏற்பட்டது. அடுத்த புளூ மூன் 2026 மே மாதம்  ஏற்படும்.

 ஏன் சுப்பர் மூன்?

 பூமியை சந்திரன் சுற்றிவருவதற்கு 29.5 நாட்கள் செல்லும், அதாவது 29.5 நாட்களுக்கு ஒரு தடவை பௌர்ணமி (முழு நிலவு)  தென்படும். ஆனால், சீரான வட்டப்பாதையில் பூமியை சந்திரன் சுற்றிவருவதில்லை. அது நீள்வட்டச் சுற்றுப்பாதையிலேயே சுற்றி வருகிறது. அதாவது மாதத்தின் சில நாட்களில் பூமிக்கு அண்மையாகவும் சில நாட்களில் அதிக தொலைவிலும் சந்திரன் இருக்கும்.

பூமிக்கு நெருக்கமாக சந்திரன் இருக்கும் நாட்களில் வரும் பௌர்ணமி தினத்தில் முழு நிலவானது மிகப் பிரகாசமாக இருக்கும். இதுவே பெரும் நிலவு (சுப்பர் மூன்)  என அழைக்கப்படுகிறது.

 அமெரிக்காவிலுள்ள  இயற்கை வரலாற்று நூதனசாலையைச் சேர்ந்த கிரகவியல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா ரசல் இது தொடர்பாக விளக்குகையில், பொதுவாக 2 முதல் 5 முழு நிலவுக் காலத்துக்கு பூமிக்கு நெருக்கமாக சந்திரன் காணப்படும். அதனால் பல சுப்பர் மூன்கள் தொடர்ச்சியாக வரும் என்கிறார்.  அதன்பின் பூமியிலிருந்து தொலைவான பகுதிக்கு சந்திரன் சென்றுவிடும்

இந்த வருடம் ஜூலை 3 முதல் செப்டெம்பர் 27 வரை தொடர்ச்சியாக 4 சுப்பர்மூன்கள் வருகின்றன. இவற்றில் 3 ஆவது சுப்பர் மூன் நாளை தென்படுகிறது.

நாசாவின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி பிரெட் எஸ்பனாக் இது தொடர்பாக விளக்குகையில், பூமியிலிருந்து 382,900 கிலோமீற்றர் (238,000 மைல் ) தொலைவில் இருக்கும் சந்திரன், கடந்த ஜூலை 3 ஆம் திகதி சுப்பர் மூன் தினத்தில் 361,934 கி.மீ. தூரத்துக்கு நெருங்கி வந்தது.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி சுப்பர் மூன் தினத்தில் 357,350 கி.மீ. (222,158 மைல்) தொலைவுக்கு நெருங்கி வந்தது.  ஆகஸ்ட் 30 ஆம் திகதி  சுப்பர் புளூ மூன் தினத்தில் மேலும் நெருக்கமாக பூமியிலிருந்து 357,444 கி.மீ. தொலைவுக்கு சந்திரன் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

சுப்பர் புளூ மூன்

 சுப்பர் மூனும் புளூ மூனும் இணைந்து சுப்பர் புளூ மூன்  தோன்றும் நிகழ்வுகள், இரு தடவைகள் ஏற்படுவதற்கு இடையிலான காலம்  2 மாதங்கள் முதல் 20 வருடங்கள் வரை இருக்கலாம் எனவும் சராசரியாக 10 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு சுப்பர் புளூ மூன்  ஏற்படுவதாகவும் நாசா கூறுகிறது.

இறுதியாக 2018 ஜனவரியில் சுப்பர் புளூ மூன் ஏற்பட்டது. நாளைய தினத்தின் பின் அடுத்த சுப்பர் புளூ மூன், 14 வருடங்களின் பின்னர் அதாவது, 2037 ஜனவரியிலேயே ஆண்டிலேயே ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »