மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை தோட்டத்தில் வீடொன்றை தோட்ட அதிகாரி ஒருவர் உடைத்த சம்பவத்தை அடுத்து, அங்குள்ள 11 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனமும், ஏனைய 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியமும் வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டதை தொடர்ந்து, தோட்ட நிர்வாகத்தினரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் அதிகாரிகளும் அந்த பகுதிக்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள அரச காணி உறுதிப் பத்திரங்களை, 11 குடும்பங்களுக்கும் பிரித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் திட்டத்திற்கு உட்பட்ட வகையில், 11 வீடுகளையும் அமைக்கவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
சுமார் 30 லட்சம் ரூபா செலவில் வீடொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 8 மாதங்களில், குறித்த 11 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கையொன்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உத்தரவிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ், இந்த சுய தொழில் வேலைவாய்ப்புக்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமது அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறித்த பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொண்டு இந்த திட்டத்தை தயாரிக்குமாறும், உரிய தரப்பிற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.