Our Feeds


Monday, August 28, 2023

Anonymous

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை ஆதரிக்க மாட்டோம் - த.தே.கூ

 



(நா.தனுஜா)

இந்தியாவின் நட்பு நாடு அல்லாத, இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சாராத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கரிசனைகளைத் தோற்றுவிப்பது முற்றிலும் நியாயமானது என சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ம் திகதி 'ஷி யான் 06' என்ற சீன ஆய்வுக்கப்பல் நாட்டுக்கு வருகைதரவுள்ளது. 

இவை இலங்கையில் இந்திய - சீன இராஜதந்திர மோதலுக்கு வழிவகுக்கும் எனவும், மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர். 

இருப்பினும் இலங்கைக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்றும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் மற்றும் சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுவதனால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் நியாயமானவை என்று இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இவ்விவகாரத்திலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா வெளிப்படுத்தும் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முற்றிலும் நியாயமானவை என்று சுட்டிக்காட்டினார்.

 இந்தியாவுக்கு சார்பாக செயற்படவேண்டும் என்ற நோக்கில் இக்கருத்தை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், 'இந்தியா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் உள்ளது. இருப்பினும் சீனா இப்பிராந்தியத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே இந்தியாவின் நட்பு நாடு அல்லாத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்புசார் கரிசனைகளைத் தோற்றுவிப்பது நியாயமானதொன்றேயாகும்' என்று தெரிவித்தார்.

 அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுவதில் அர்த்தமில்லை என்றும், மாறாக இதில் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »