Our Feeds


Sunday, August 13, 2023

Anonymous

இனவாத கண்ணாடிகளை கழற்றிவிட்டு வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் அழுகுரலை கேளுங்கள் - சாணக்கியனுக்கு கிழக்கின் கேடயம் கண்டனம்.

 


நூருல் ஹுதா உமர் .


ஓநாய்களின் பரிதாப அலறல் ஆட்டுக்குட்டிகளின் இரத்தத்தை நோக்கித்தான் என்பதை பல வருடங்களாக நாங்கள் எல்லா இடத்திலும் ஆழமாக வலியுறுத்தி வருகின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் போன்றவர்கள் தீவிரமான இனவாத போக்குள்ளவர்கள் என்பதை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தெரிவித்து வந்தோம். ஆழமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத பலரும் இனவாதிகளை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாடினார்கள் என கிழக்கின் கேடயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கின் கேடயம் சார்பில் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள அறிக்கையில்  மேலும், தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் இருந்தே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்கள் கடுமையான அடக்குமுறைகளை அனுபவித்து வருகின்றனர் என்பதையும் 28.76% நிலப்பரப்பில் வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம் வெறும் 01% நிலத்துக்குள் அடக்கப்பட்டுள்ள விடயத்தையும் அந்த காலத்தில் வெளிநாட்டில் உல்லாசமான வாழ்க்கை அனுபவித்த சாணக்கியன் போன்ற குறுகிய இனவாத சிந்தனை கொண்டோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


முஸ்லிம் சமூகத்தின் மீதான பல்வேறு  அடக்குமுறைகளை தமிழீழ புலிகளை தொடர்ந்து அரசநிர்வாகமும்  திட்டமிட்டு மேற்கொண்டு வருவது நாட்டில் எல்லோரும் அறிந்த விடயமாகும். அதில் மட்டக்களப்பில் தான் உயர்ந்தளவில் அநீதிகள் நடப்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். முஸ்லிங்கள் காணிகளை கொள்ளையடிப்பதாக கூச்சலிடும் இரா.சாணக்கியன் எம்.பி போன்றவர்கள் இனவாத கண்ணாடிகளை கழற்றிவிட்டு சகோதர முஸ்லிம் சமூகத்தின் இன்னல்களை திறந்த மனதுடன் பார்க்க முன்வர வேண்டும்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 2,876 சதுர கிலோ மீற்றர். இதில் 27% வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு 786 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புத் தேவையாகயுள்ள நிலையில், இன்று காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, அடங்களாக முஸ்லிம் சமூகம் வாழும் மொத்த நிலப்பரப்பு  1.04% வீதத்திற்கும் குறைவானதாகும். 1999ம் ஆண்டு அரசினால் உருவாக்கப்பட்ட பனம்பலன ஆணைக்குழு நாட்டின் பல பகுதிகளில் எல்லை நிர்ணயங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், வாழைச்சேனை மத்தி, கிராண் பிரதேச செயலகங்களை தற்காலிக இணைப்பாக வர்த்தமானி வெளியிடப்படாமல் இன்று வரை வைத்துள்ளது என்பதையும் இதற்கான முழுக்காரணம் புலிப்பயங்கரவாதிகளின் கெடுபிடிகளும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளும் என்பதை நாடறியும்.


13வது திருத்தச்சட்டத்தை மாகாணங்களுக்கிடையில் நடைமுறைப்படுத்துகின்ற போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை குறிப்பாக, வட, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கக்கூடாது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். அதற்கு இது போன்ற செயல்களே மூல காரணமாக அமைந்துள்ளது.


1999ம் ஆண்டு அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்பட்ட பனம்பலன ஆணைக்குழு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வடமுனை, ஊத்துச்சேனை, கள்ளிச்சை, புனானை, வாகனேரி ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளையும் தற்காலிகமாக கிராணுடன் இணைத்தமையையும், வாழைசேனை மத்தியுடன் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவை தற்காலிகமாக இணைத்ததன் காரணமாக ஓட்டமாவடி சமூகம் ஏறத்தாழ 176 சதுர கிலோ மீற்றர் நிலத்தை முழுமையாக இழந்ததையும் சாணக்கியன் போன்றோர்கள் அறிவார்களா?


வாழைச்சேனை மத்திக்கு ஆணைக்குழுவினால் வாகரைப்பிரதேசத்திலிருந்து முன்மொழியப்பட்ட 240 சதுர கிலோ மீற்றர் நிலத்தையும் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குவதற்கு புலிப்பயங்கரவாதிகளும் மட்டக்களப்பு மாவட்ட கச்சேரி நிர்வாகமும் இணைந்து மறுத்து விட்ட நிலையில், ஓட்டமாவடியிலிருந்து பெற்றுக்கொண்ட ஒரேயொரு கிராம சேவகர் பிரிவான தியாவட்டவானையும் வாழைச்சேனைப்பற்றில் இருந்த ஒரு சில முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் வைத்தே இன்று வரை வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகம் தற்காலிக நிர்வாகம் செய்கிறது. இன்று கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் வாழும் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை பிரதேசங்களைச்சேர்ந்த மக்கள் வாழ்வதற்கு இடமில்லாமல் ஓட்டமாவடியிலிருந்து வாழச்சேனை மத்திக்கு வழங்கப்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக்காணிகளில் குடியேறச் சென்றவர்களையே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முஸ்லிங்களின் பூர்வீகக் காணிகளை அபகரிப்பதை மறைத்து, காணித்திருட்டில் முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது விழித்துக்கொண்டிருந்தவனின் கண்ணில் தூங்கியன் குத்தியது போன்றுள்ளது.


இப்படியான இனவாத நடவடிக்கைகளும், இனவாத அறிக்கைகளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றை  வன்மையாகக் கண்டிக்கிறோம்.- என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »