Our Feeds


Thursday, August 17, 2023

Anonymous

நாட்டை விட்டு ஓடிய கோட்டாவின் இறுதிப் பயண தகவல் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு

 



றிப்தி அலி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு மாலைதீவிற்கு தப்பிச் செல்வதற்காக பயன்படுத்திய இலங்கை விமானப் படையின் விமானம் தொடர்பான தகவல்களை கோரியிருந்த நிலையில், அந்த தகவல்களை வழங்காமல் இலங்கை விமானப் படை தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.


குறித்த தகவல்களை கடந்த ஜுலை 4ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன தலைமையிலான தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு கடந்த ஜுன் முதலாம் திகதி இலங்கை விமானப் படைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவை இலங்கை விமானப்படை அமுல்படுத்தாமல் தொடர்ச்சியாக இழுத்தடித்துக் கொண்டு வருகின்றது. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் தகவல் வழங்குவதற்காக இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்ட காலப் பகுதியிலிருந்து 35 நாட்கள் கழிந்துள்ள நிலையிலும் குறித்த தகவல்களை இலங்கை விமானப் படை வழங்கவில்லை.

மாறாக, இந்தத் தகவல்களை வழங்குவதற்கு மேலும் கால நீடிப்பினை வழங்குமாறு கடந்த ஜுலை 2ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை ஐந்து தடவைகள் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இலங்கை விமானப் படையின் தகவல் அதிகாரியான எயர் கொமாண்டோ ஈ.டப்ளியூ.ஆர். ஜயவர்த்தனவினாலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

"குறித்த தகவல்களை வழங்குவதற்காக அந்த தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி சரியான முறையில் தயாரிப்பதற்காக மேலும் காலம் தேவைப்படுவதனாலேயே இந்த நீடிப்பினை கோருகின்றோம்" என குறித்த கடிதத்தில் தகவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜுலை 13ஆம் திகதி இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மாலைதீவிற்கு சென்றதாக இலங்கை விமானப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த விஜயத்திற்கு இலங்கை விமானப் படையினால் எவ்வளவு நிதி செலவளிக்கப்பட்டது? குறித்த நிதியினை செலுத்தியது யார்? போன்ற தகவல்களை கோரிய தகவலறியும் விண்ணப்பம் இலங்கை விமானப் படைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், குறித்த தகவலறியும் கோரிக்கையினை விமானப் படையின் அப்போதைய தகவல் அதிகாரியான எயர் கொமாண்டோ மனோஜ் கெப்பட்டிபொல மற்றும் அப்போதைய குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ். பியன்வில ஆகியோர் நிராகரித்தனர்.

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) டி (i)ஆவது பிரிவிற்கு அமையவே இந்த தகவலறியும் கோரிக்கை நிராகரிப்பதாக அவர்கள் இருவரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிராகரிப்புக்கு எதிராக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது.

குறித்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் 2023.02.16, 2023.03.01 2023.04.04 மற்றும் 2023.06.01 ஆகிய திகதிகளில் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்தே மேற்படி தகவல் கோரிக்கைக்கு பதில் வழங்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »