(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வெளிநாடுகளில் பதிவு செய்துவிட்டு வீட்டுப்பணிப்பெண்களாக 177706 பேர் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் நாட்டுக்குள் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிபவர்களின் எண்ணிக்கை தாெடர்பில் எந்த தகவலும் தொழில் அமைச்சில் இல்லை.
அத்துடன் எந்த துறைக்கு பணியாளர்களை இணைத்துக்கொண்டாலும் அவர்களை ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விடயத்தை புதிய தொழில் சட்டத்தில் உள்வாங்கி இருக்கிறோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ராேஹினி கவிரத்ன எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் பிரகாரம் 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் 2023,8,29திகதிவரை ஒரு இலட்சத்தி 77ஆயிரத்தி 706பேர் வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக இலங்கைப் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 23758 பேர் மீண்டும் நாட்டுக்கு வந்துள்ளனர்.
அதன் பிரகாரம் தற்போது 153948 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக இருந்து வருகின்றனர். என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்கள் பணியகத்தில் 2வருடங்களுக்கே ஒப்பந்தம் செய்து செல்கின்றனர். இவ்வாறு ஒப்பந்த காலம் முடிவடைந்து, ஒப்பந்தத்தை நீடித்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் அல்லது பதிவு செய்யாமல் சென்றிருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் பணியகத்துக்கு தெரியாது.
அதனால் இந்த குறைபாடுளை போக்கும் வகையில் இலங்கையில் இருந்து வெளியில் செல்லும் அனைவரதும் தகவல்களை டிஜிடல் மயமாக்கும் முறையை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் இதுதொடர்பான அனைத்து தகவல்களையும் எமக்கு தெரிவிக்க முடியுமாகும்.
அதேநேரம் வீட்டுப்பணிப்பெண்களாக இலங்கையில் தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தொடர்பான எந்த தகவலும் தொழில் அமைச்சில் இல்லை என தொழில் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். என்றாலும் புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுப்பணிப்பெண் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வழங்கப்படவேண்டும் என்ற விடயம் உள்வாங்கப்பட இருக்கிறது.
அதேபோன்று எந்த துறைக்கு பணியாளர்களை இணைத்துக்கொண்டாலும் அவர்களை ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விடயத்தை புதிய தொழில் சட்டத்தில் உள்வாங்கி இருக்கிறோம். அதேபோன்று அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பாகவும் சட்ட திடடங்கள் கொண்டுவருவோம்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் தற்போது 2,4 மில்லியன் பேரே பங்காளிகளாக இருந்து வருகின்றனர். அதனால் முறையான மற்றும் முறையற்ற தொழிலாளர்களையும் இதில் பங்காளிகளாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோன்று வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேடியாகவே தூதரகத்துக்கு அல்லது கொழும்புக்கு அறிவிப்பதற்கு முடியுமான முறைமை ஒன்றை ஏற்படுத்த இருக்கிறோம் என்றார்.