Our Feeds


Friday, September 1, 2023

SHAHNI RAMEES

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்

 

இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

மேலும், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பில் 196 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  உதய குமார அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பான முறைப்பாடுகள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இணையவெளியில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறுமிகள் தொடர்பில் 76 முறைப்பாடுகளும், சிறுவர்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அந்த அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு தேசிய திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »