இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) மாலை வெளியான நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இந்த மாணவி வர்த்தக பிரிவில் பொருளியல் , வணிகம் , கணக்கியல் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 728 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 801 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த அன்ரனி சரோன் டயஸ் உயிரியல்,பெளதீகவியல்,இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 3A தர சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
அதேநேரம் 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர்.
முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
மன்னார் நிருபர் லெம்பட்
யாழ் நிருபர் பிரதீபன்