Our Feeds


Friday, September 29, 2023

ShortNews Admin

பதவி விலகி, நாட்டை விட்டும் வெளியேறிய நீதிபதி - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கிறது தமிழரசு கட்சி



நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (02) போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, தனது பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுமளவுக்கு, அவருக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 2023.10.02ம் திகதி திங்கட்கிழமை, காலை.9.30 மணிக்கு, கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ள கண்டனப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் மாவட்ட கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகப் பகுதியான குருந்தூர் மலையின் இருப்பையும், அங்கு தமிழர்கள் வழிபாடியற்றும் உரித்தையும் நிலைநிறுத்தியதற்காகவும், தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு அனுமதித்ததற்காகவும் சிங்கள பேரினவாதத்தால் பழிவாங்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு ஏற்பட்ட இந்நிலை, தமிழினம் சார்ந்து சிந்திக்கின்ற, இனத்தின் இருப்பை நிலைநிறுத்த நியாயத்தின் பாற்பட்டு கடமையாற்றுகின்ற இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருவருக்கும் உள்ளது.

நீதியின் செங்கோலை, அதிகாரத் தரப்புகளுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் சாதகமாக வளைக்க மறுத்ததற்காக ஒரு தமிழ் நீதிபதிக்கு இந்த நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால், இந்த நாட்டின் சிறுபான்மை இனமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இருப்பு எவ்வளவு தூரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்பதுபற்றி சர்வதேச சமூகத்தின் கவனத்தைக் கோரும் வகையில் இக்கண்டனப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாறு அழைத்துநிற்கிறோம்.

இனத்தின் இருப்புக்காகப் பதவி துறந்திருக்கும் நீதிபதிக்காக சர்வதேசத்தின் நீதியைக் கோரத் தவறுவது, எங்கள் இனத்தின் இருப்பை இன்னும் வலுவிழக்கச் செய்யும் என்பதை உணர்வோம், இணைவோம் - என்றுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »