2023.09.14ஆம் திகதி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங் இற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொள்கைகள், குறிக்கோள்கள்; சமூகம் தொடர்பிலான பணிகள்; தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த முன்னெடுப்புக்கள், நல்லுறவுகள் பற்றிய அறிமுகங்கள் இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவருக்கு வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த காலங்களில் சமூகம் மற்றும் தேசியம் சார்ந்து ஜம்இய்யா எவ்வாறான பணிகளை, செயற்பாடுகளை செய்திருக்கிறது என்பது பற்றிய தெளிவுகளை வழங்கியதோடு கலந்துகொண்டிருந்த நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் தெளிவுகளை வழங்கினர்.
இந்த சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அகில ஜம்இய்யத்துல் உலமா சமூகம் தொடர்பில் மேற்கொள்ளும் முன்னெடுப்புக்கள், பணிகளை தான் மதிப்பதாக தெரிவித்ததோடு மனித நேயப்பணி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் அமெரிக்க தூதரகம் சார்பில் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங் மற்றும் அவரது பிரதிநிதிகளான நஸ்ரின் மரிக்கார், ரூபி வூட்சைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி அஹ்மத் அஸ்வர், உபதலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் ஏ.எம்.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எம்.எம். முர்ஷித், அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷைக் எம்.எப்.எம். பாழில், அஷ்ஷைக் எம்.ரிபாஹ் ஹஸன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.