முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வினை, அந்தக் கட்சியினர் சாய்ந்தமருது லி மெரிடியன் தனியார் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நிகழ்வை நடத்துவதற்கு வேறு இடமொன்றினை பார்க்குமாறு – மண்டபத்தை பதிவு செய்தோருக்கு மண்டப நிருவாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மண்டபத்தின் பிரதான நிருவாகியொருவரிடம் பேசி இதனை உறுதி செய்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நிகழ்வை சாய்ந்தமருதில் நடத்துவதற்கு – அந்த ஊரில் பாரிய எதிர்ப்பு உள்ளமையினையும், நிகழ்வை நடத்துவதற்கு மண்டபத்தை வழங்கினால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதனையும் மண்டபத்தை பதிவு செய்தோருக்கு தாம் தெரியப்படுத்தி, வேறு இடமொன்றைப் பார்க்குமாறு கூறியுள்ளதாக லீ மெரிடியன் மண்டப நிருவாகி – புதிது செய்தித்தளத்திடம் கூறினார்.
அஷ்ரப் நினைவு நிகழ்வினை எதிர்வரும் 16ம் திகதி சாய்ந்தமரு லீ மெரிடியன் மண்டபத்தில் நடத்துவதற்கு மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள நிலையிலேயே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையொன்றைப் பெற்றுத் தருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கி விட்டு – பின்னர் ஏமாற்றியமையினால், முஸ்லிம் காங்கிரஸுக்கு சாய்ந்தமருது மக்கள் தமது எதிர்ப்பினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.