Our Feeds


Wednesday, September 6, 2023

ShortNews Admin

VIDEO: ராஜபக்ஷர்களின் ஆட்சியில் கொலை, இரத்தம் என்பது பிரதான அம்சங்களாகும். - மரிக்கார் MP



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள். செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை தொடர்ந்து புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களின் ஆட்சியில் கொலை, இரத்தம் என்பது பிரதான அம்சங்களாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 செய்தி வெளியிட்டதன் பின்னர் பலர் கலக்கமடைந்துள்ளனர். அமெரிக்காவின் பி.பி.சி செய்தி நிறுவனமும் எதிர்வரும் காலங்களில் பல விடயங்களை வெளியிடலாம். உண்மையை வெகு நாளைக்கு மறைக்க முடியாது.

ராஜபக்ஷர்கள் மரணம், கொலை ஆகியவற்றின் ஊடாகவே ஆட்சிக்கு வருவார்கள், கொலைகள் ஊடாகவே ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார்கள். கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த வேளையில் தொழில் வல்லுநர்கள் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் போத்தல ஜயந்த மற்றும் அந்த சங்கத்தின் செயலாளர் சனத் பாலசூரிய ஆகியோரை அழைத்து 'அளவுக்கு மீறி செயற்பட வேண்டாம், தெரியும் தானே நடப்பதை... ஆகவே ஊடகவியலாளர்களின் போராட்டத்தை உடன் நிறுத்துங்கள்' என்று அச்சுறுத்தினார்.

பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்தபோது பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் வல்லுநர்களின் செயலாளர் சனத் பாலசூரிய ஜேர்மனிக்கு சென்றார். போத்தல ஜயந்த கடுமையாக தாக்கப்பட்டு முல்லேரியா வைத்தியசாலைக்கு முன்பாக வீசப்பட்டார். அதன் பின்னர் போத்தல ஜயந்த அமெரிக்காவுக்கு சென்றார்.

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிரச தொலைக்காட்சியில் பிரதானியாக நான் பதவி வகித்த போது புலனாய்வு பிரிவின் பிரதானியான சுரேஷ் சலேவுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட ஹந்தர விதாரன என்பவர் யுத்தம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு பலமுறை வலிறுத்தினார். நான் முடியாது அதற்கான அதிகாரம் எனக்கில்லை என்று குறிப்பிட்டேன். அதன் பின்னர் சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில் தான் ராஜபக்ஷர்களின் அரசியல் வரலாறு காணப்படுகிறது.

சிரச தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட  ஊடகவியலாளரும்,சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறான சூழலில் கொழும்பு மாநாக சபையின் முன்னாள் மேயரின் வீட்டில் இடம்பெற்ற ஒரு சந்திப்பின் போது அரச புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் என்னிடம் 'உங்களை 24 மணிநேரத்துக்குள் கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே உயிரை பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் தலையீட்டுடன் 'நான் பாதுகாக்கப்பட்டேன். ஆகவே இதுவே ராஜபக்ஷர்களின் வரலாறு. பொதுஜன பெரமுனவின் புதிய உறுப்பினர்களுக்கு இவை தெரியாது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும்' என்று குறிப்பிட்டோம். அளுத்கமை சம்பவத்தில் இருந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமாக வாழும் சூழல் மறுக்கப்பட்டது. இதற்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை கொண்டு ராஜபக்ஷர்கள் தான் ஆட்சிக்கு வந்தார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள். செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்பட வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »