Our Feeds


Sunday, September 10, 2023

Anonymous

VIDEO: தாம் அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ ஒத்துக் கொண்டார் - சம்பிக்க ரணவக்க அதிரடி



(இராஜதுரை ஹஷான்)

சிங்கள பௌத்தர்கள் மத்தியில் அடிப்படைவாதம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தி ராஜபக்ஷர்கள் நெஷனல் தௌஹீத் ஜமாத் அமைப்பை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

நெஷனல் தௌஹீத் ஜமாத் அமைப்பு ராஜபக்ஷர்களுக்கு சார்பாக செயற்படவில்லை என்பதை ராஜபக்ஷர்களால் நாட்டு மக்களிடம் குறிப்பிட முடியுமா, ராஜபக்ஷர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சர்வதேச மட்டத்தில் தேசிய புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தியுள்ளார்கள்  என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெடம்பே ரஜமஹா விகாரைக்கு ஒருமுறை சென்று 'தாங்கள்  அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்த அடிப்படைவாத என்ன? அதன் உறுப்பினர்கள் யார் என்பதை தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே, கபில ஹெந்த விதாரண, முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

நெஷனல் தௌஹீத் ஜமாத் அமைப்பு யாருடையது, தேர்தல் காலத்தில் நெஷனல் தௌஹீத் ஜமாத் அமைப்பு ராஜபக்ஷர்களுக்கு செயற்படவில்லையா, 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுக்கு வாக்களிக்குமாறு நெஷனல் தௌஹீத் ஜமாத் அமைப்பு குறிப்பிடவில்லையா, பௌத்தர்கள் மத்தியில் அடிப்படைவாதம், கருத்தடை தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டு மறுபுறம் நெஷனல் தௌஹீத் ஜமாத் அமைப்பை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்டுபடுத்திக் கொள்ளவில்லையா? என்பதை ராஜபக்ஷர்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பிரிவு என்பனவற்றின் கவனத்துக்கு அப்பாற்பட்ட வகையில் சஹ்ரான் செயற்பட்டுள்ளான். சர்வதேச மட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தீவிரமடைந்த பின்னணியில் 2010 முதல் 2015ம் ஆண்டு காலப் பகுதியில் நேஷனல் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு அரசியல் நோக்கத்துக்காக அரச அனுசரனையுடன் பாதுகாக்கப்பட்டது.

உலகில் எந்த நாட்டு புலனாய்வு பிரிவும் குண்டுதாரியின் வீட்டுக்கு செல்லாது. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை நடத்த சென்ற ஜமீலை புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளார்.

அத்துடன் புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் மாத்தளைக்கு சென்று பிறிதொரு அடிப்படைவாதியிடம் இந்த தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறான புலனாய்வு பிரிவு கிடையாது. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியதாகவே பலவிடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது எவரும் தப்பிக்க முடியாது.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொண்டுவர முயற்சித்த சானி அபேசேகரவை ராஜபக்ஷர்கள் கொல்லாமல் கொன்றார்கள். மனசாட்சியில்லாமல் அவரை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் தேசிய புலனாய்வு பிரிவு தற்போது அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ குடும்பம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள செய்த விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது. இதனால் தேசிய புலனாய்வு பிரிவு சர்வதேச மட்டத்தில் மலினப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையை திருத்திக் கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »