ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்தது குறித்த தனது செய்திக்காக CNN தொலைக்காட்சியின் பிரபல செய்தியாளர் சரா சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்தது என இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தமைக்காகவே சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவ்வாறான உணர்வுபூர்வமான மனதை வருத்தக்கூடிய செய்திகளை வெளியிடும்போது நிதானமும் எச்சரிக்கையும் துல்லியமும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் தன்னுடைய முன்னைய செய்தியில் தான் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாங்கள் நேரலையில் இருந்தவேளை ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது அதனை உறுதிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நான் எனது வார்த்தைகளில் மேலும் அவதானமாக இருக்க வேண்டும் மன்னியுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
