யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவற்காக அயல் மாவட்டங்களில் இருந்து பொதுசுகாதார பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்புகளின் வீரியம் அதிகரித்து உள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவானோர் டெங்கு நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகளவான அக்கறை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 150 பேர் நாளாந்தம் இனங்காணப்படுவதுடன், இந்த மாதத்தில் மாத்திரம் ஆயிரத்து 300க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் மாத்திரம் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளான 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.