Our Feeds


Friday, December 22, 2023

ShortNews Admin

மத்ரஸா மாணவன் மரணம் | மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல் - நீதி மன்றில் நடந்தது என்ன?



சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் ஜனவரி  மாதம் 04ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு நேற்று  வியாழக்கிழமை (21)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த 05.12.2023 அன்று  மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை  சேர்ந்த 13 வயது முஸ்அப் எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 


மத்ரஸாவில் மஃரிப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.


இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.


மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.


இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


இதே வேளை அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது  சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை (2)  அன்று  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு குறித்த பெண்ணும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »