வெளிநாடுகளில் இருந்து அரிசி மற்றும் சோளத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கீரி சம்பா அரிசிக்கு இணையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இந்த அரிசி ஒரு வகை நச்சுத் தன்மை வாய்ந்த அரிசி என்றும் இந்த அரிசியில் கட்மியம், ஈயம் அடங்கியுள்ளதாகவும், தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தது போன்று தரமற்ற அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
சீனி வரி குறைக்கப்பட்டு சீனி இறக்குமதி செய்யப்பட்டதைப் போன்று அரசாங்கத்தின் நட்பு வட்டார நண்பர் கைக்கூலிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக அரிசிக்கு அறவிடப்படும் 68 ரூபா வரியை ஒரு ரூபாவாகக் குறைத்து அரிசியை இறக்குமதி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக நாட்டின் தேசிய நெற்செய்கையாளர் மிகவும் அநாதரவான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.