கொழும்பு தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலொன்று பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (01) இடித்து அழிக்கப்பட்டது.
அத்தோடு கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஷிரான் பாசிக்கு சொந்தமான தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த ஹோட்டல் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறி போலி ஆவணங்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார், கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் அதிகாரிகளால் இன்றைய தினம் பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.