நடப்பாண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம், இந்த வருடத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யவும் இந்த நிதியை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலுக்களுக்காக செலவு செய்யவும் நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதியை அரசியல் நிலவும் வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டியிருக்குமெனவும் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டில் அந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்துக்கு அமைய நிறுவப்பட்ட மற்றும் 2354/06 இலக்கம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால் தொடர்புடைய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற அங்கீகரத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சரவை மேலும் கவனம் செலுத்தியுள்ளது.