Our Feeds


Thursday, February 1, 2024

SHAHNI RAMEES

மேலதிக வகுப்புக்கு செல்ல பணம் இல்லாததால் உயிரை விட்ட ஆயிஷா - நாம் பெற வேண்டிய படிப்பினை

 


பகுதி நேர வகுப்பிற்கு செல்ல பணமில்லை.

மாணவியொருவர் தற்கொலை செய்துள்ளார். இச் செய்தியை யாரும் இலகுவாக கடந்து சென்று விட முடியாது. இதற்கு நாமும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோமா, இதற்கான உண்மையான காரணம் என்ன, எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் என்ன செய்ய வேண்டும் என்ற கோணத்திலெல்லாம் சிந்தித்து, செயற்படுவது மிக அவசியமானது.


இலங்கையிலுள்ள மக்கள் பொருளாதார ரீதியாக கஸ்டத்தில் உள்ளமை யாவரும் அறிந்த பகிரங்கமான ஒரு உண்மை. இவ் விடயங்களில் அரசியல் வாதிகளை குறை கூறிக்கொண்டிருப்பதை விடுத்து, இந் நிலமையை எதிர்கொள்ள எவ்வாறான வழிகளை கைக்கொள்ளலாம் என ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். சாதாரண தரம் கற்கும் ஒரு மாணவி பகுதி நேர வகுப்பிற்கு சென்று தான் கணித பாடத்தை கற்க வேண்டுமா என முதலில் சிந்திப்பது பொருத்தமானது.


ஒரு வாரத்தில், ஓரிரு மணி நேரம் மாத்திரமே கல்வியை வழங்கும் பகுதி நேர கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் கல்வியை, ஒரு வாரத்தில் ஐந்து நாட்களும் இயங்கும் பாடசாலையால் ஏன் கொடுக்க முடியவில்லை என்பதை நிச்சயம் நாம் சிந்தித்தேயாக வேண்டும். பகுதி நேர கல்வி நிறுவனங்களுக்கு சென்றே கல்வி பயில வேண்டும் எனும் மன நிலை அனைவரிடத்திலும் மாற வேண்டும். ஒரு மாணவனுக்கு தனக்கு பொறுப்பான பாடத்தை ( subject ) கற்று கொடுக்க முடியாத ஆசிரியர்கள் தயவு செய்து ஆசிரியர் தொழிலில் இருந்து விடுபட வேண்டும் அல்லது பாடசாலை நிருவாகம் மாற்று வழிகளை கையாழ்தல் வேண்டும்.


சாதாரண தர கணித அறிவை ஒரு தனியார் நிறுவனம் சென்று தான் கற்க வேண்டுமா என்ற கோணத்தில் சிந்தித்தலும் அவசியமானது. என்னை பொறுத்த வரையிர் உயர் தர பிரிவில் இணைந்த கணிதம், உயிரியல் படித்த ஒரு சாதாரண மட்டத்தில் உள்ள ஒருவரால் மிக இலகுவாக சாதாரண தர கணித பாடத்தை கற்றுக்கொடுக்க முடியும். இது போன்றே ஏனைய பாடங்களும், உயர் தரத்தில் அந்தந்த துறையை தேர்தெடுத்தோரினால் கற்றுக்கொடுக்க முடியும். இந் நிலை தோற்றம் பெற்றால் சாதாரண தரத்துக்கெல்லாம் தனியார் நிறுவனத்தை நம்பியிருக்க தேவையில்லை. வீட்டுக்குள்ளே அல்லது நம்மை அண்டியுள்ள சூழலுக்குள்ளேயே விடயத்தை முடித்துகொள்ளலாம். சற்று தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களாலேயே உயர் தரத்துக்கு கற்றுக்கொடுக்க முடியும் என்ற எதார்த்தத்தை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். சாதாரண தர மாணவிக்கே இந் நிலையென்றால், கணக்கிட்டு காசி பறிக்கும் உயர்தர மாணவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?


கொள்ளை இலாபம் எதிலும் கூடாது. தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தனியார் கல்வி துறையில் கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் சற்று கட்டணங்களில் கவனம் செலுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளது. ஆசிரியர்களுக்கு பாடசாலையிலும் சம்பளம் கிடைக்கின்றது தானே! ஆசிரியர்களிடமும் முழுமையான இலவச சேவையை எதிர்பார்ப்பது தவறு. அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே! தற்போது இக்கட்டை அவர்களும் எதிர்கொள்ள தானே வேண்டும்.


மேலே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயற்பட்டால் மிக கன கச்சிதமாக செய்து முடித்து விடலாம். இது ஒன்றும் சீன வித்தையல்ல. தான் கற்ற பாடசாலை மாணவர்களுக்கு  மேலதிக அறிவு புகட்டுவதை பழைய மாணவர்கள் பொறுப்பெடுக்கலாம். மஹல்லா ரீதியாக ஒருங்கிணைத்து இலகுவாக செய்து கொள்ளலாம். இதனையெல்லாம் செய்ய தவறிய நாம் ஒவ்வொருவரும் குற்றவாழிகளே! இந் நிலைக்கு நாட்டை கொண்டு வந்த அரசியல் வாதிகள் நிச்சயம் குற்ற வாழிகளே! இந்த அரசியல் வாதிகளௌ அற்ப சுய நலத்துக்காக தேர்தெடுத்த ஒவ்வொருவரும் குற்ற வாழிகளே!


குற்றம் யார் மீதுள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தால், அதில் எங்கோ ஒரு இடத்தில் நிச்சயம் நாமும் இருப்போம் என்பதில் ஐயமில்லை. இந் நிலை போன்று இன்னுமொரு மாணவிக்கு வராமல் தடுக்க எம்மால் இயலுமானதை செய்ய வேண்டும். இம் மாணவி கல்வி கற்க முடியவில்லை என்றே தற்கொலை செய்துள்ளார். கல்வி கற்காவிட்டால் உயிர் போகாது. சில வேளை அம் மாணவி கல்வியை உயிராகவும் கருதி இருக்கலாம். இன்று எத்தனையோ பேர் உண்ண உணவில்லாமல் தவித்துகொண்டிருக்கின்றனர். பலர் தங்களது நிலையை வெளியில் சொல்ல முடியாமல் வெதும்பி கொண்டிருக்கின்றனர். இந் நிலையை எவ்வாறு எதிர்கொள்வதென அனைவரும் சிந்திப்போம். எம்மால் இயலுமானதை செய்வோம்.


ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »