Our Feeds


Tuesday, February 13, 2024

News Editor

கல்வியும் காணி உரிமையுமே எமது தேவை!-மனோ கணேசன்


 கல்விக்கு முதலிடம் என்பது எனது அடிப்படைக் கொள்கை. காணி உரிமையும் கல்வியுமே எமக்குத் தேவை. இலங்கை அரசிடமே காணி உரிமையை வேண்டும். இதை மோடியால் தர முடியாது. ஆனால், அவரால் கல்வியைத் தரமுடியும். எமது மக்களுக்கு கல்வித் துறையில் உதவி செய்து கல்வி விடயத்தில் எமது மக்களைக் கைதூக்கி விட முடியுமானால் ஏனைய எல்லா விடயங்களும் சரியாகக் கிடைத்துவிடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அவர் ‘தமிழன்’ வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போதே இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் முழுவிபரம் பின்வருமாறு,


இந்திய நாட்டின் “இலங்கைக் கொள்கை” தமிழர்களுக்கு சார்பானதென சிங்கள மக்கள் நினைக்கிறார்களா?


சிங்கள மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எப்பொழுதுமே இந்திய நாட்டின் இலங்கைக் கொள்கை தமிழர்களுக்கு சார்பானது இல்லை. இதுவே உண்மை. ஆனால், அப்படியான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அது பிழையானது. சமீபத்தில் வந்திருக்கக்கூடிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தபோதும் கூட நேரடியாக அவரிடம் சொன்னேன். இந்தியாவைப் பொறுத்தவரையிலே இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் சார்பாக ஒரு நாடாகக் கருதப்படுகிறது. இதை மாற்றுங்கள். அது அப்படியிருக்கவும் இல்லை. ஆனால், அப்படியிருப்பதாக ஒரு தோற்றப்பாடு இருக்கிறது. இது இலங்கைக்கும் பிரயோசனமில்லை, இந்தியாவுக்கும் பிரயோசனமில்லை.


இந்தியாவின் இலங்கைக் கொள்கையானது இலங்கை சார்பானதாக இருக்கவேண்டும். அப்போது தான் நாங்கள் பயனடைய முடியும். இல்லாவிட்டால் சிங்கள மக்கள் அநாவசியமாக எங்களைப் பார்த்து சந்தேகப்படுகின்றார்கள்,

அச்சப்படுகிறார்கள். அது தேவையில்லை. அது முதற்பகுதி.


எப்படி இந்தியாவின் கொள்கை தமிழர்கள் சார்பாக இருக்க முடியும்?


1964ஆம் ஆண்டு மலையக மக்களை கேட்காமலேயே அவர்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்ளாமல் 60 வீதமானவர்களை இந்தியாவிற்குள் உள்வாங்கிக் கொண்டார்கள். அதனால் இலங்கையில் வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்கள் குறிப்பாக, இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெரும் பலவீனமடைந்தது.


மலையகத் தமிழ் எம்.பிக்களாக இன்று நாங்கள் 9 பேர் தான் இருக்கின்றோம். அது நடந்திருக்காவிட்டால் 25 பேர் இருந்திருப்போம். நாங்கள் 25 பேர். வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் 25 பேர். முஸ்லிம் எம்.பிக்கள் 25 பேர் என தமிழ் பேசும் எம்.பிக்கள் இருந்திருப்போம். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையே மாறியிருக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் இந்தியா தான்.


இப்படி இருக்கும்போது இந்தியா எப்படி எங்களுக்கு சார்பாக இருக்க முடியும்? அப்படி இல்லை. சிங்கள மக்களின் தோற்றப்பாடு பிழையானது. அது தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. மாறவேண்டும் என நினைக்கின்றேன். அது எல்லோருக்கும் நல்லது.


தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணம் இலங்கை அரசியலில் எவ்வித மாற்றங்களைக் கொண்டுவரும்?


தேசிய மக்கள் சக்தி என்றால் என்ன? அது ஒரு தோற்றப்பாடு தான். ஒரு கூட்டணி தான். அதற்குள்ளே சென்று பார்த்தால் அது ஜே.வி.பி. மக்கள் விடுதலை முன்னணி. இதன் வரலாறு என்ன? ஆரம்பத்தில் 5 வகுப்புகளை நடத்துகிறார்கள். தங்களின் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு 5 வகுப்புகளை நடத்தி அவர்கள் அந்த வகுப்புகளில் தெளிவுபெற்ற பிறகு தான் அவர்களை கட்சிக்குள் உள்வாங்கினார்கள். அது அந்தக் கட்சியின் முறைமை. அது சரியானது.


அந்த வகுப்புகளில் இந்திய ஏகாதிபத்தியம் என்ற ஒரு வகுப்பு இருக்கிறது. அந்த இந்திய ஏகாதி பத்தியத்தின் முகவர்களாக அடையாளம் காட்டியது இலங்கை மலையகத் தமிழர்களைத் தான். அது தவறு. அதற்குப் பின்னர் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது 13ஆம் திருத்தத்தில் வந்தது. வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதை அந்த மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால், அந்த இணைப்பை சட்ட ரீதியாகப் பிரித்தது ஜே.வி.பி தான். வழக்கு போட்டுப் பிரித்தார்கள்.


அது மட்டுமல்ல, 2005ஆம் ஆண்டு யுந்தம் செய்ய வேண்டுமா என தயங்கிக் கொண்டிருந்த மஹிந்தவை யுத்தம் செய்யுங்கள் எனத் தள்ளிவிட்டது ஜே.வி.பி. தான். இதை நான் சொல்லவில்லை. அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.நாங்கள் தான் வடக்கு, கிழக்கைப் பிரித்தோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தோம் என்றும் பெருமை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.


அது மட்டுமல்ல, 8088களில் இலங்கை யுத்தத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தை வீழ்த்தினார்கள். பல மரணங்கள் நிகழ்ந்தன. இந்திய அமைதிகாக்கும் படையை குரங்குகளின் படை என்று சொன்னார்கள். அந்தப் படை இலங்கைத் தமிழ் மக்களிடையே பெருமை மிக்க எதையும் செய்யவில்லை. அது வேறு விடயம். ஆரம்பத்தில் புகழப்பட்ட படை கடைசிக் காலத்தில் இகழப்பட்ட படையாகப் பேசப்பட்டது.


இதை ஏன் சொல்கிறேனென்றால், இது தான் உண்மை. ஆனால், வரலாற்றுக்குள் நாம் வாழ முடியாது. இன்று ஜே.வி.பி. மாறி வருகிறது. இது மகிழ்ச்சி. நண்பர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அணியினர் இந்தியா சென்றிருக்கின்றார்கள்.

புதுடில்லியில் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நிகழ்த்திவிட்டு மோடியின் சொந்த ஊரான அஹமதாபாத் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்திற்குச் சென்றார்கள். ஆகவே, இந்தியா பற்றிய அவர்களின் பார்வை மாறி வருகிறது. இந்தியாவுக்கும் அவர்கள் பற்றிய பார்வை மாறி வருகிறது. இது நல்ல விடயம். இந்தியாவை நிராகரித்து விட்டு இலங்கையிலே நாங்கள் அரசியல் செய்ய முடியாது. ஆட்சியமைக்க முடியாது. இது ஒரு தனிநாடு. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இந்தியா பெரிய நாடு என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.


கடந்த காலங்களில் ஜே.வி.பி. எப்படி இருந்தாலும் கூட இன்று ஜே.வி.பி. தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைக்கும் ஓர் அணியாக மாறி வருகின்றது என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக, அனுர குமார எனது நெருங்கிய நண்பராக இருக்கின்றபடியால் தனிப்பட்ட நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரவு இலங்கை அரசியலில் ஏற்படுத்திய நற்பாதிப்பு மற்றும் த.மு.கூ., இ.தொ.கா. ஆகிய இரு அணிகளின் இடையிலான அடிப்படை வேறுபாடு என்ன?


தமிழ் முற்போக்கு கூட்டணி பெயரிலேயே இருக்கிறதே நாங்கள் முற்போக்காளர்கள், அவர்கள் பிற்போக்காளர்கள் அவ்வளவு தான். அத்தோடு, நாங்கள் ஜனநாயகக் கட்சி, அவர்கள் குடும்பக் கட்சி. அதில் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் தலைவர்களாக இருந்து வருகிறார்கள்; இருக்கப் போகிறார்கள். இது தான் உண்மை. இதை மறுக்க வேண்டிய தேவை கிடையாது.


தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பது ஒரு தனிக்கட்சியல்ல. ஒரு கூட்டணி. 3 கட்சிகள் உள்ளே இருக்கின்றன. இங்கே ஜனநாயகம் புகுந்து விளையாடுகிறது. இங்கே ஆழமாக ஜனநாயகம் வேறூன்றியிருக்கிறது. ஆகவே, அது தான் வித்தியாசம்.


இ.தொ.கா. என்பது நிலப்பிரபுத்துவ பண்ணையார் தன்மை கொண்ட ஒரு தொழிற்சங்க அடிப்படை கொண்ட ஓர் அணி. ஆனால், எங்களது அரசியல் தெளிவுகொண்ட, அரசியல் பார்வை கொண்ட, அரசியல் கட்சிகளின் கூட்டணியான, முற்போக்கான பார்வை கொண்ட புரட்சிகர சமூக ஜனநாயக சிந்தனை கொண்ட ஓர் அணி. இது தான் வித்தியாசம்.


மலையக அரசியல் வரலாற்றில் செளமியமூர்த்தி தொண்டமான் மட்டுமல்ல, இன்னும் பல தலைவர்கள் இருக்கின்றார்கள் என ஒரு காணொளியில் நீங்கள் கூறிய காரணம் என்ன?


அதுதான் உண்மை. அது மறைக்கப்பட்ட உண்மை. ஆனால், செளமியமூர்த்தி தொண்டமான் நான் மதிக்கும் மலையகத் தலைவர்களில் ஒருவர். இன்று அவரால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இ.தொ.காவின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய இருவரை விட செளமியமூர்த்தி தொண்டமானுடன் அதிகமாகப் பழகி நேரடியாக அரசியல் செய்தது நான்தான். உயிரோடு இருக்கும் மலையக அரசியல்வாதிகளில் பிரபலமான ஒருசில அரசியல்வாதிகளில் நானும் ஒருவன்.


1999ஆம் ஆண்டு முதல் முதலாக நான் மேல்மாகாணத்திற்கு சென்ற பொழுது அங்கு இ.தொ.கா. எங்களது மூல கட்சியான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் பல கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்திய வம்சாவளி பேரணி என்ற பேரணியை அமைத்துத்தான் நாங்கள் கூட்டணியாகச் சென்றோம். அதில் 9 மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். அதில் 8 பேர் இ.தொ.காவைச் சேர்ந்தவர்கள். நான் ஒருவர்தான் ஐ.தொ.கா. கொழும்பு எம்.பியாகத் தெரிவுசெய்யப்பட்டேன்.


என் தந்தை 1996ஆம் ஆண்டு இறந்துபோனார். அவர் இறக்கும் பொழுது அவருக்கும் செளமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையில் கலந்துரையாடல் ஏற்பட்டு ஒரு கூட்டணி அமைப்போம் என்ற மாதிரியான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அவர் இறந்த பிறகும் அந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அந்த 1997, 1998, 1999, 2000ஆகிய நான்கு ஆண்டுகளில் செளமியமூர்த்தி தொண்டமானுடன் நான் நெருக்கமாக செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அவரை நன்றாகத் தெரியும்.


ஆனால், அவர் மட்டும் தான் மலையகத்தின் ஒரே தலைவர் என்ற மாதிரியான தோற்றப் பாட்டைக் காட்டுவதென்பது ஏனைய மலையகத்தின் மகா மனிதர்களுக்கு செய்யக்கூடிய மாபெரும் துரோகம்; நயவஞ்சகம்; அது பிழை.

மலையகத்தின் பிதா கு.நடேசய்யர் மற்றும் அவரது மனைவியார் மீனாட்சி அம்மாள், அப்துல் அஸீஸ், தொண்டமான், மேத்தா, இராஜலிங்கம், ஐ.எஸ்.பெரேரா, எஸ்.ஜே.வைத்தியலிங்கம், குஞ்சிபெரி சண்முகம், ஏ.எஸ்.ஜோன், பி.சாரநாதன், கே.சிவனடியான், எஸ்.சோமசுந்தரம், எஸ்.என்.சுப்பையா, எஸ்.செல்லையா, கே.குமாரவேல், பி.கே.வெள்ளையன், டி.இராமானுஜம், சிவபாக்கியம் குமாரவேல், பீ.பி.தேவராஜ், கோகிலம் சுப்பையா, போஸ் செல்லையா, எஸ்.நடேசன், கே.சுப்பையா, கே.ஜீ.எஸ்.நாயர், எஸ்.மாரியப்பா, இரா.சிவலிங்கம், சந்திரசேகரன், பழனிசாமி பிள்ளை இவர்கள் எல்லோரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.


மலையகத்தில் நடைபெற்ற போராட்டங்கள், காணி உரிமைப் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐ.தொ.கா. பாரிய பங்களிப்பு செய்திருக்கின்றது. ஆகவே, இந்த அனைவரையும் மறைத்துவிட்டு செளமியமூர்த்தி தொண்டமான் ஒருவர் தான் மலையகத்தின் ஒரே தந்தை ஒரே மகான் என்று சொல்வதென்பது பிழை. அது நான் மேலே குறிப்பிட்ட மகான்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல, செளமியமூர்த்தி தொண்டமானுக்கு செய்யப்படும் துரோகம் தான். அவர் இருந்திருந்தால் அதை விரும்பியிருக்க மாட்டார். ஆகவே, அவரின் பின் வந்தவர்கள் இந்தப் பகடை விளையாட்டைக் கற்றறிந்துகொள்ள வேண்டும். அல்லது

கேட்டறிந்துகொள்ள வேண்டும். இதுவே எனது எண்ணப்பாடு.


த.மு.கூட்டணிக்குள் முரண்பாடுகள் தலைதூக்கி உள்ளதாகக் கூறப்படுகிறதே?


இல்லை; அப்படி இல்லை; அது ஊடகப் பார்வை; அது குறித்து கவலைப்படுவதும் இல்லை. ஊடகங்கள் எங்களைப் பற்றிப் பேச வேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்பும் ஓர் அரசியல் ஜனநாயகவாதி நான். ஆகவே, சந்தோஷமாக கேள்விக்கு பதிலளிப்பேன். பிரச்சினை இல்லை. கேள்வி கேட்கப்படுகிறதென்றால் நாங்கள் பேசுபொருளாகி இருக்கிறோம். எங்களைப் பற்றிப் பேசப்படுகிறது. அது மகிழ்ச்சி தானே.


எமது த.மு.கூ. என்பது ஒரு கூட்டணி. இதில் 3 கட்சிகள் உள்ளன. அதற்குள் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய 3 பாரம்பரிய கட்சிகள் உள்ளன. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மூலக் கட்சி தான் ஜனநாயக மக்கள் முன்னணி. 1940 இலிருந்து எங்களுக்கு வரலாறு இருக்கிறது. புரட்சிகரமான சிந்தனையுடன் பாரம்பரியமான இ.தொ.காவின் நிலப் பிரபுத்துவ கொள்கைக்கு எதிராக சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டதே மலையக மக்கள் முன்னணி.


அதேபோல, தொழிலாளர் தேசிய முன்னணி என்பது வெள்ளையனால் உருவாக்கப்பட்ட புரட்சிகர சிந்தனைகொண்ட கட்சி. பிற்காலத்தில் அது பின்னடைவைச் சந்தித்தபோது இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் திகாம்பரம், திலகராஜ் ஆகியோரால் கையேற்கப்பட்டு இன்று எங்களுடன் கூட்டணியில் இருக்கிறது. ஆகவே, வரலாறு உள்ள 3 கட்சிகள் கொண்ட கட்சிதான் இது. ஆகவே, ஜனநாயகக் கட்சிகள் இருக்கும்போது கருத்து வேறுபாடுகள் இருக்கும். சண்டை போடுவோம். ஆனால், கூட்டணியாக இருப்போம். ஆகவே, இதைப் பார்த்துவிட்டு குறைபாடு என்று சொல்லிவிடக் கூடாது. யூ.என்.பிக்குள்ளே முரண்பாடு இருக்கிறது; இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடு இருக்கிறது; ஜே.வி.பிக்குள் முரண்பாடு இருக்கிறது; அவ்வாறு ஒவ்வொரு கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் வரும்பொழுது கூட்டணிக்குள்ளே முரண்பாடுகள் இல்லாமல் இருக்குமா? அவற்றைப் பேசித் தீர்த்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். எங்கள் இலக்கு ஒன்று தான். ஆகவே, அதை முரண்பாடாகக் கருதிவிட வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.


த.மு.கூ. கலைக்கப்பட வேண்டுமென புலம்பெயர்ந்த மலையகத் தமிழ் சிந்தனையாளர் ஒருவர் கூறியுள்ளாரே? யார் அவர்?


அவரை யார் என்று கேட்கக்கூடிய நிலைமையில் தான் இருக்கிறார் அவர். இப்போது புலம்பெயர்ந்துள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களில் சாதாரணமாகச் சென்றவர்கள் எல்லாம் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். இங்கு அவ்வப்போது அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு வயிற்றெரிச்சல் ஒரு காழ்ப்புணர்ச்சி இயலாமை எல்லாம் இருப்பதாக உணர்கிறேன். இது ஈழத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பொருத்தமானதே. இதையெல்லாம் மீறிக்கூட வடக்கு, கிழக்கில் பல போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கூட புலம்பெயர்ந்து சென்று காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருசிலர் வெளிநாட்டில் இருந்துகொண்டு தாங்கள் தான் அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு எங்களைப் பார்த்து பணிப்புரை விடுக்கிறார்கள். இவர் யார் த.மு.கூட்டணியை கலைக்க வேண்டும் என்று சொல்வதற்கு? உண்மையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. ஆனால், அது இன்று இல்லை. அது உடைந்துபோயிருக்கிறது.


இதைப்பார்த்துக் கவலையடைந்த மக்கள் எங்களைப் பார்த்து முன்மாதிரியாக நினைக்கிறார்கள். முஸ்லிம்களிடத்தில் கூட 2 கட்சிகள் இருக்கின்றன. இரண்டும் ஒன்றுசேர முடியவில்லையே. ஆனால், மலையகத்தில் எங்களது 3 கட்சிகளும் இ.தொ.காவும் இருக்கும்போது 4 இல் 3 சேர்ந்து செயற்படுகின்றோம் என்றால் இதைப் பாராட்ட அல்லவா வேண்டும். குறைபாடுகள் காணப்பட்டால் சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து கலைத்துவிட வேண்டும் என்று சொல்வாரென்றால் சொல்பவர் தலையில் இடி விழவேண்டும். ‘த.மு.கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என்று நீ சொல்வாயானால் நீ ஒரு தேசத் துரோகி; மலையகத்தின் துரோகி.(சற்றுக் கோபத்துடன்)


பரபரப்பான அரசியல்வாதி நீங்கள். ஆனால், கொஞ்ச காலமாக அமைதியாக இருக்கிறீர்களே. என்ன காரணம்?


தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களை ஒரே இடத்தில் காணமுடிவதில்லை. ஆரம்பத்தில் இருந்த அந்தச் சுறுசுறுப்பு இப்போது கூட்டணியில் காணமுடியவில்லை. என்னதான் நடக்கிறது?

இதில் பல விடயங்கள் உள்ளன. நான் அவ்வாறு நினைக்கவில்லை. மனோ கணேசன் ஒரு சுறுசுறுப்பான அரசியல்வாதி இல்லை என்று நீங்கள் நினைத்தால் ‘தமிழன்’ பத்திரிகையை வாங்கிப் பாருங்கள். (சிரிக்கிறார்)


நாங்கள் பல இடங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எங்கள் கட்சி வேலைகளைத் தனியாகச் செய்தாலும் கூட ஒன்றாகவே உள்ளோம். எங்களின் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்புக் கட்சி அல்ல. கொழும்பு, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா. மாத்தறை ஆகிய 7 மாவட்டங்களில் கிளை பரப்பி செயலகங்கள் அமைத்து செயற்படக்கூடிய கட்சி. நுவரெலியாவை மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் பகிர்ந்து கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியில் இந்த 7 மாவட்டங்களில் ஐ.ம.முன்னணிதான் இருக்கிறது. இதே நிலையில் தான் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளோம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதில் கவலை வேண்டாம். மலையகத்தின் எதிர்காலத்தை நோக்கிய சரியான பயணத்தை த.மு.கூ. முன்னெடுக்கிறது.


அண்மையில் இந்தியத் தூதுவரை சந்தித்தீர்கள். அங்கு என்ன பேசப்பட்டது?


இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சார்பான நாடு தான் இந்தியா என்ற எண்ணப்பாடு எங்களுக்கும் பயனளிக்கவில்லை, உங்களுக்கும் பயனளிக்கவில்லை. ஆனால், சிங்கள மக்களுடன் அனுசரித்து நட்புறவுடன் அவர்கள் மத்தியிலே வாழுகின்ற மக்கள் கூட்டம் என்பதனால் சிங்கள மக்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. அதை உங்களது (இந்தியா) செயற்பாடு குழப்பிவிடக்கூடாது.


ஆகவே, சில தினங்களுக்கு முன் அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பொன்றில் ஒரு சாதகமான மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் 80 வீதமானவர்கள் மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என விரும்பியிருக்கிறார்கள். இலங்கையின் 90 வீதமான மக்கள் மலையக மக்களுக்கு காணி உரிமை வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இது த.மு.கூட்டணியின் வெற்றி; எங்களுடன் சேர்ந்து செயற்படக்கூடிய மலையக சிவில் சமூகத்தின் வெற்றி; நாங்கள் இந்தக் கோரிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.


கடந்த வருடத்துடன் முடிவடைந்த 200 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு முன்னாலும் தொடர்ச்சியாக இருந்தது. இது குறித்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். இரண்டு தடவைகள் இது குறித்து பிரம்மாண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இது பிற்போக்காளர்களின் வெற்றியல்ல; எங்களின் முற்போக்காளர்களின் வெற்றி; சிங்கள மக்களுடன் பேசி நாங்களே அதைக் கொண்டுவந்தோம். எங்களின் எம்.பிக்கள் அனைவரும் சிங்கள மொழியில் சரளமாகப் பேசக் கூடியவர்கள். ஏன் சிங்களத்தில் பேசுகின்றோமென்றால் எங்களின் செய்தி சிங்கள மக்களுக்கும் செல்ல வேண்டும். எங்களின் அரசியல் பார்வை தூரப்பார்வை கொண்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »