ஆர்.ராம்
ஐக்கிய மக்கள் சக்தி பரந்துபட்ட அணியை உருவாக்கி வருகின்ற நிலையில் தனிநபர் விருப்பு வெறுப்புக்கான தீர்மானங்களை மாற்றிச் செயற்பட முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரைச் சந்தித்து உரையாடியதோடு அதன் ஆலோசனைக்குழுவின் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அக்கட்சியின் தவிசாளரான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா அதற்கு கடுமையான அதிருப்தியை வெளியிட்டதோடு, ஜெனரல் தயா ரத்நாயக்கவையும், கட்சியின் தீர்மானத்தினையும் மோசமாகவும் விமர்சித்திருந்தார். அத்துடன் இந்த விடயத்தினை கட்சித்தலைமைக்கும், பொதுச்செயலாளருக்கும் அறிவித்தும் இருந்தார்.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
ஐக்கிய மக்கள் சக்தியானது பரந்து பட்ட அணியொன்றை உருவாக்கி வருகின்றது. அந்த வகையில் குறித்த அணியில் பல்வேறு தரப்பினரும் நாளுக்கு நாள் இணைந்து வருகின்றார்கள்.
எமது கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு அமைவாகவே அவர்களை நாம் அரவணைத்து வருகின்றோம்.
இவ்வாறான நிலையில், தனிப்பட்ட ரீதியில் ஒருநபருடன் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு காணப்படுகின்ற முரண்பாடுகளுக்காக எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருபவர்களை நாம் ஒதுக்கி வைத்துவிட முடியாது.
மேலும், எமது கட்சி தலைமையிலான பரந்து பட்ட கூட்டணியில் இணைந்து கொள்வதற்க இன்னும் பலர் ஆர்வமாக இருக்கின்றபோதும், நாம் குற்றச்சாட்டுக்களற்ற எதிர்மறையான நிலைப்பாடுகளற்றவர்களையே தெரிவு செய்து உள்ளீர்த்து வருகின்றோம் என்றார்.