Our Feeds


Saturday, February 3, 2024

News Editor

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனைக் காலம் குறைப்பு


 ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனைக் காலம், 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.


தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் பிரதமராக நஜீப் ரசாக், கடந்த 2009இல் பதவியேற்றார். அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, 1 எம்.டி.பி., என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை, அப்போது அவர் நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இதன் நிதியை, அவர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1 எம்.டி.பி., நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 1 எம்.டி.பி., ஊழல் தொடர்பான முதல் வழக்கில், நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.


இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வயதை கருத்தில் வைத்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு மன்னிப்பு வாரியம் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, அவரது தண்டனை காலம் பாதியாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது சிறை தண்டனை காலம் 12 ஆண்டுகளில் இருந்து, ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 2028இல் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என தெரிகிறது. அதேபோல், அவரின் அபராத தொகையும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »