Our Feeds


Tuesday, March 5, 2024

ShortNews Admin

தமிழர் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? என்ன நடக்கிறது?



இலங்கையின் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்துக்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரச அமைப்புகள் முயற்சித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகள் அனைத்தும் அதானி நிறுவனத்துக்குச் சாதகமாக நடத்தப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.


இலங்கையில் அதானி நிறுவனத்தின் திட்டம் என்ன? இதில் என்ன பிரச்சினை? எதிர்ப்புக் கிளம்புவது ஏன்?


உலகிலேயே பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும் முக்கியமான எட்டு இடங்களில் தெற்காசிய மார்க்கத்தின் சொர்க்கமாக இலங்கை திகழ்கிறது. பல ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் கடந்து, சுமார் 30 நாடுகளில் இடம்பெயர்ந்து இந்தப் பறவைகள் இலங்கைக்கு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பறவைகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான மார்க்கமாக மன்னார் உள்ளது. மறுபுறம், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தின் ஓர் அங்கமாகவும் மன்னார் பகுதி உள்ளது.


இப்பகுதியில் கடல்சார்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். இலங்கை வரலாற்றில பூகோள ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மன்னார் பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், புலம்பெயர் பறவைகள் இலங்கைக்குள் வராத காலங்களில் அரச நிறுவனங்கள் அறிவியல்பூர்வமற்ற சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து, அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்துக்கு, கற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை வழங்குவதற்குத் தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.


காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான அனுமதியை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை நடைபெறுகிறது. எனினும், மக்கள் எழுப்புகிற குற்றச்சாட்டுகளை சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்த நிபுணர் குழு நிராகரித்துள்ளது


இது தொடர்பாக பி.பி.சி. சிங்கள சேவையிடம் பேசிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் சம்பத் செனவிரத்ன, ‘‘இலங்கைக்கு வருகை தரும் புலம்பெயர் பறவைகளில் 10 இலட்சம் பறவைகள் வரை ஒக்டோபர் முதல் மார்ச் மாத காலப் பகுதியில் மன்னாரில் தங்கிவிடும். எனினும், புலம்பெயர் பறவைகள் இல்லாத காலப் பகுதியில் ஆய்வுகளை நடத்தி, அதில் புலம்பெயர் பறவைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் தவறு’’ எனக் கூறுகிறார்.


மேலும், இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் அதிகாலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையான பகல் பொழுதில் தயாரித்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் இரவுநேரத்திலேயே பறப்பதாகவும் சம்பத் குறிப்பிடுகிறார்.


அதானியின் திட்டம் என்ன?


இலங்கை மன்னாரில் அதானி திட்டத்தை முறைகேடாக அனுமதிக்க முயற்சியா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பது ஏன்?


உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 250 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாக 52 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தம்பவாணி காற்றாலை திட்டத்துக்கு இணையாக மன்னார் தீவில் பெரும்பாலான பகுதிகளில் புதிய காற்றாலைகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதை சுற்றுச்சூழல் அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.


ஆண்டொன்றுக்கு 1048 ஜிகாவோட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இதன்மூலம் ஆண்டுக்கு 8 இலட்சம் தொன் கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு 18 பில்லியன் இலங்கை ரூபா எரிபொருளுக்காக செலவிடப்படவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


இலங்கை எரிசக்தி அதிகார சபை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின்படி, 202 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ரமணி எல்லேபொல தலைமையிலான குழு தயாரித்துள்ளது. பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோன், தாவரங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க, நீர்நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து டி.ஏ.ஜே.ரண்வல ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.


இந்த ஆய்வுக் குழுவின் தலைவரான ரமணி எல்லேபொல, பி.பி.சி. சிங்கள சேவையிடம் பேசும்போது, ‘‘அதானிக்கு தேவையான திட்டத்திற்கு நாங்கள் அனுமதி வழங்கியதாகக் கூற முடியாது. சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆராய்ந்து சில காற்றாலைகளை அகற்றியுள்ளோம். சிலவற்றை இடமாற்றம் செய்துளோம்” என்றார்


அதானி நிறுவனத் திட்டத்தால் மன்னார் பகுதிக்கு என்ன ஆபத்து? இலங்கை மன்னாரில் அதானி திட்டத்தை முறைகேடாக அனுமதிக்க முயற்சியா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பது ஏன்?


‘‘தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.


எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக உள்ளன. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் காற்றாலைகள், கரையோரப் பகுதிகளின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதானி நிறுவனத்தின் திட்டத்தினால் மன்னார் தீவு பகுதியில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து காற்றாலைகள் இயங்கவுள்ளன. அதனால், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.


நன்றி பி.பி. சி.தமிழ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »