Our Feeds


Sunday, March 17, 2024

SHAHNI RAMEES

நாடு முழுவதும் இரத்தினங்களை தேடும் ஜனாதிபதியின் திட்டம்..!


 இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாகவும், அத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.


அத்துறையில் ஈடுபட்டவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.



அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளால் அவர்களது தொழில்துறையைப் பாதித்துள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்துறையின் மற்ற பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.


வரிக் கொள்கையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய முடியாது, ஆனால் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை வலுப்படுத்த பொருத்தமான அமைப்பு தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.


அத்துடன், அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பிரேரணையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இலங்கையில் இரத்தினக்கல் கைத்தொழில் தொடர்பான ஏற்றுமதிகளை அதிகரிப்பதுடன் பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.


மேலும், எதிர்காலத்தில் சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையிலுள்ள மாணிக்கக்கல் வர்த்தகர்களுக்கு இதற்கான பூரண வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.


அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாணிக்கக்கல் மற்றும் சுரங்க தொழில்களை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »