Our Feeds


Wednesday, March 13, 2024

SHAHNI RAMEES

அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம்..!

 



நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையைப் புரிந்து

கொள்ளாமல், அதிகாரத்தைப் பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளினால் நாட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அந்தத் தவறை செய்ய தாம் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, உண்மைக்கு முகம் கொடுத்து நாட்டுக்கு சாதகமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.



யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


முன்வைக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி, இளைஞர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.


கேள்வி:

தற்போது கைபேசிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும், இணையதளச் சேவைக் கட்டணத்திலும் சிக்கல் உள்ளது. ஆனால் நீங்கள் ஒன்லைன் கல்வி முறையை அறிமுகப்படுத்தியதால், கடந்த கொரோனா காலத்தில் வசதியாக அமைந்தது. எனவே இளைஞர்களின் தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்?



பதில்:

அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக இருக்கிறது. இலவசமாக கொடுப்பதற்காக வேறொருவரிடமிருந்து அறிவிடவேண்டியுள்ளது. நம் நாட்டில் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தோம். வருமானம் இல்லாத போது மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்க பணம் அச்சிடப்பட்டது. இதனால், நாம் பெற்ற வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக, கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தோம்


அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, ​​மக்களிடம் பணம் செலுத்தும் திறன் ஏற்படும். பணம் செலுத்தும் திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது இலங்கையில் ஒரு டொலருக்காக சுமார் 310 ரூபா செலவிடப்படுகிறது. நாங்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கிறோம். அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தற்போது நாங்கள் பணியாற்றி வருகிறோம்.



எனவே, நான் இலவச டேட்டா வழங்குவதாக இங்கு உறுதியளித்தால், அது அனைவரையும் தவறாக வழிநடத்துவதாகவே அமையும். எனவே, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, மக்களின் பணம் செலுத்தும் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செயல்படுத்துவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். சிலவற்றை இலவசமாகக் கொடுத்தால், எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் உருவாகும். நாடு மீண்டும் கடந்த காலத்தின் இருண்ட யுகத்திற்குள் சென்று விடாமல் அவதானமாக இருக்க வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »