Our Feeds


Saturday, March 2, 2024

ShortNews Admin

அனுர, ரனில், சஜித் என முக்கிய கட்சி வேட்பாளர்கள் தயார் - SLPP யின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மூன்று பொது வேட்பாளர்கள் இடையிலான மும்முனை போட்டியாக மாறி வருவதாகவும் மூன்று வேட்பாளர்களுக்குரிய கூட்டணிகள் தம்மை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்களாக நிறுத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று வேட்பாளர்களும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், குழுக்கள், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.


பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்ற போதிலும் அந்த கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 5ம் திகதி இலங்கை திரும்பிய பின்னர் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.


அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளில் பலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். அது குறித்து ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணி,ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ஜனாதிபதியுடன் இணையவுள்ளவர்கள்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சம்பந்தப்பட்ட அணியினர், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனிடையே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


கூட்டமைப்பின் ஆதரவு மாத்திரமல்லாது, வடக்கு,கிழக்கு மக்களின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கும் என பேசப்படுகிறது.


சஜித்தை ஆதரிக்கும் மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம்.


அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே மனோ கணேசன், ரவூப் ஹக்கீம்,பழனி திகாம்பரம்,ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான குழுவினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சிலரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.


பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அண்மையில் ஊடகங்களிடம் கூறியிருந்தனர்.


அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க சில அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பொதுக்கூட்டங்களை நடத்தி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »