Our Feeds


Wednesday, April 3, 2024

News Editor

மூன்று வருடங்களின் பின் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம்


 மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (03) இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.

எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஆசிரியர்களாகிய உங்களது அறிவு மிகவும் முக்கியமானது. இன்று நாளுக்கு நாள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சமூகம் உள்ளது. எனவே, கடந்த காலங்களில் பாட அறிவை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்றுவது சாத்தியமாக இருந்த போதிலும், இன்று அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது. உங்கள் அறிவு இன்னும் 10, 20 ஆண்டுகளில் போதுமானதாக இருக்குமா என்று சிந்தியுங்கள். எனவே, ஆசிரியர்கள் பாட அறிவை மேம்படுத்த எப்போதும் பாடுபட வேண்டும்.

இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »