Our Feeds


Sunday, April 21, 2024

SHAHNI RAMEES

ஈரான் ஜனாதிபதியின் அழைப்புக்கு மறுப்பில்லை : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு



ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு எம்மால் விடுக்கப்பட்ட

அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


ஈரானின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கு ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானின் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு நாம் அழைப்பினை விடுத்திருந்தோம்.


இந்நிலையில், அவருடைய அழைப்புக்கு தற்போது வரையில் எவ்விதமான மறுப்புக்களும் வெளியிடப்படவில்லை. அத்துடன், அவருடைய வருகைக்கான முன்னாயத்தப் பணிகள் நாட்டினுள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில், திட்டமிட்டபடி உமா ஓயா பல்நோக்கு அவிருத்தி திட்ட ஆரம்பமும், ஈரான், இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையிலான முக்கிய கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.


மேலும், இலங்கை அரசாங்கமானது அணிசேராக் கொள்கையுடன் அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு, பல்தரப்பு உறவுகளைப் பேணிவருகின்றது. 


ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் வருகையினால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று கரிசனைகளைக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »