Our Feeds


Thursday, April 25, 2024

News Editor

கார் பந்தய விபத்துக்கு கவனயீனமே காரணம்


 தியத்தலாவையில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்துக்கு போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனயீனமே காரணம் .எனவே அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (14) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே   இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
 
சில தினங்களுக்கு முன்னர் தியத்தலாவையில் கார் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பில் தேடிப் பார்த்த போது போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவருகின்றது. ஓடு பாதையில் இருந்து 50 மீற்றருக்கு அப்பால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதுடன் அதன் பின்னாலேயே பார்வையாளர்கள் இருக்க வேண்டும். 

போட்டியின் போது ஓடுபாதையில் தூசியை குறைக்க அடிக்கடி நீர் ஊற்ற வேண்டும். அத்துடன் வளைவுகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் அவை எதனையும் செய்யாமல் இந்த போட்டி நடந்துள்ளது.

இதனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் குற்றவியல் குற்றத்திற்கு தண்டனை பெற வேண்டியவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். போட்டியின் இறுதியில் பந்தயத்தில் கலந்துகொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »