Our Feeds


Monday, April 22, 2024

ShortNews Admin

கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் எப்படி பதில் தலைவரானார்? - விஜேதாசவின் நியமனத்திற்கு அழகியவண்ண கடும் எதிர்ப்பு



ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இந்த முரண்பாடுகளைத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டபோதும் சந்திரிகா - மைத்திரி என்ற இரு தரப்பும் இணக்கம் தெரிவிப்பதாக இல்லை.


இப் பின்புலத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஏட்டிக்போட்டியான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.


ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைப்பது என்பதிலும் கட்சிக்குள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றன.


கடும் எதிர்ப்பு


இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.


கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போதே இந்த நியமனம் இடம்பெற்றது.


இந்த நியமனத்தை கட்சியின் மூத்த உறுப்பினரான போக்குரவத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.


கட்சியில் அங்கம் வகிக்காத ஒருவரை பதில் தலைவராக நியமித்தமையை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் சந்திரிகாவின் செயற்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றனர்.


சந்திரிகாவின் நிலைப்பாடு


சந்திரிக்காவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்கனவே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கட்சியின் பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டமை சந்திரிக்காவை அதிக கோபத்திற்கு ஆளாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.


விஜயதாச ராஜபக்ச பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு சந்திரிகா தரப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.


இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டவிரோதமான அரசியல் குழுக் கூட்டமொன்று நேற்று முன் தினம் சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.


கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு மைத்ரிபால சிறிசேன தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த அரசியல் குழு கூட்டம் அந்த கட்சியின் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தலைமையில் இடம்பெற்றதாக தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்த கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படும் குழுவினர் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »