Our Feeds


Friday, May 10, 2024

Zameera

நீதிமன்ற தீர்ப்புகள் தடையில்லாதுவிட்டால் ஆசிரிய நியமனங்களை விரைவாக வழங்க முடியும் - அமைச்சர் சுசில்


 நீதிமன்ற தீர்ப்புகள் தடையாக அமையாவிட்டால் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க முடியும்.

23,000  பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்காக நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஒரு தரப்பினர் நீதிமன்றத்திற்கு சென்று மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இன்று வரை தடையாக உள்ளது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலுமிருந்து 23 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் நாம் விண்ணப்பங்கள் கோரியிருந்தோம் அதன்போது 52,000 பேர் அதற்காக விண்ணப்பித்திருந்தனர். 

அவர்களுக்கு எழுத்து மூலம் பரீட்சை நடத்தப்பட்டது. ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க கடந்த வருடம் மார்ச் மாதம் நாம் தயாராக இருந்தோம் அனுமதி அட்டைகளையும் நாம் அனுப்பியிருந்தோம் அந்த நிலையிலேயே 33 பேர் நீதிமன்றத்திற்கு சென்று அதனை சவாலுக்கு உட்படுத்தினர். 

வயதெல்லையை 45 வரை நீடிக்குமாறு கோரி அவர்கள் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். இன்னும் சிலர் எந்த விசாரணையுமின்றி நியமனங்களை வழங்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இரண்டையும் கவனத்திற் கொண்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த வகையில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை அந்த தடை உத்தரவு அமுலில் உள்ளது. அதனால் எமக்கு அதற்கான பரீட்சையை நடத்த முடியாத நிலையே தற்போதுள்ளது .

உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு உள்ள நிலையில் எமக்கு அது தொடர்பில் வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. 

எனினும் இதற்கிடையில் ஆசிரிய சேவையில் ஓய்வு பெற்றோர் மற்றும் பதவியை இராஜினாமா செய்துள்ளோருக்கு பதிலாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுத்தோம். 

அந்த வகையில் 9 மாகாணங்களிலும் உரிய பரீட்சை நடத்தப்பட்டு நியமனக் கடிதங்கள் வழங்க ஆரம்பிக்கும் போது மேலும் ஒரு தரப்பினர் நீதிமன்றத்திற்கு சென்று மேற்படி தரப்பினருக்கு  நியமனம் வழங்கும் வரை இந்த நியமனத்தை வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அதற்கான தடை நீக்கப்பட்டது. அந்தத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரிகளுக்கு கட்டம் கட்டமாக நியமனம் வழங்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். 

அந்த நிலையிலேயே நேற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.. அதன் முடிவை பொறுத்தே ஆசிரிய நியமனங்களை வழங்க முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »