Our Feeds


Thursday, May 30, 2024

ShortNews Admin

பௌத்தமத தூதுக்குழு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே சந்திப்பு

 

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "காந்தாரத்திலிருந்து உலகிற்கு" என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பௌத்த மத தூதுக்குழுவினர் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர். 

இதன்போது, பௌத்தமத தூதுக்குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 

இந்த தூதுக்குழுவில் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வியட்நாமைச் சேர்ந்த திச் டக் துவான் தேரர், தாய்லாந்தைச் சேர்ந்த அனில் சக்யா தேரர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த கலாநிதி கேஷப்மான் ஷக்யா ஆகியோர் அடங்குவர். 

தூதுக்குழுவை பிரதமர் அன்புடன் வரவேற்றதோடு புத்தரின் பிறப்பு, அறிவொளி மற்றும் மரணத்தை நினைவுகூரும் 'வெசாக் தினம்' சார்ந்து நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவர்கள் பங்கேற்றமைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காந்தார கலை மற்றும் கலாசார வடிவில் வடமேற்கு பாகிஸ்தானில் தழைத்தோங்கிய அதன் பண்டைய பௌத்த பாரம்பரியம் தொடர்பாக பாகிஸ்தான் பெருமிதம் கொள்வதாக பிரதமர் எடுத்துரைத்தார். 

மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்துக்கு தனது அரசாங்கம் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதோடு மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கு பௌத்த அறிஞர்கள் மற்றும் பிக்குகளின் பங்களிப்புகளையும் அவர் புகழ்ந்து  பேசினார். 

அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய கலாசாரத்தை வளர்ப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை பௌத்த தலைவர்கள் பாராட்டியதோடு பௌத்த பாரம்பரிய தளங்கள் மற்றும் கலாசார கலைப்பொருட்களை பாதுகாத்து வைத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். 

பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் பாகிஸ்தானுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது ஆர்வத்தை  தூதுக்குழுவினர் இதன்போது வெளிப்படுத்தினர்.  

இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் பிரதமரும் தூதுக்குழுவினரும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள், பாகிஸ்தான் மற்றும் பெளத்த பெரும்பான்மை நாடுகளுக்கு இடையே கலாசார மற்றும் கல்வி பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். 

பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வது மற்றும் அமைதியான உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து செயற்படுவது என்ற தீர்மானத்துடன் இந்த சந்திப்பு முடிவடைந்தது. 

மேலும், இது தொடர்பாக உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றம் ஒன்றினை நிறுவுவதற்கான சாத்தியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. 

பாகிஸ்தான் சமய விவகார அமைச்சர் சாலிக் ஹுசேன், தகவல், ஒளிபரப்பு மற்றும் கலாசார பாரம்பரிய அமைச்சர் அதாஉல்லா தாரார், பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் ஃபதேமி ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »