Our Feeds


Thursday, June 20, 2024

ShortNews Admin

70 வருட சமய, சமூகப் பணியில் கால்பதிக்கும் “இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி” யின் மாநாடு 29ம் திகதி BMICH இல்சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய சிந்தனை, ஆன்மீக மற்றும் சமூக அபிவிருத்தியில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு இருக்கின்ற வகிபாகத்தினை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த வகையில், 1954 ஜூலை 18ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது சமய, சமூகப் பயணத்தில் எழுபதாவது அகவையில் கால்பதித்து நிற்கின்றது. 


மத ரீதியான வழிகாட்டல்களும், ஒழுக்கப் போதனைகளுமே நல்ல சமூகங்களை இவ்வையகத்தில் உருவாக்கியுள்ளன. இஸ்லாத்தின் வழிகாட்டல்களை மக்களுக்கு எத்திவைப்பதும், அதன் படி வாழ்வதற்கு வழிகாட்டுவதும்  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அன்று முதல் இன்று வரை செய்துவரும் மிகப் பிரதானப் பணியாகும். 


தனது சஞ்சிகைகள், நூற்கள், உரைகள், கலந்துரையாடல்கள், இஜ்திமாக்கள் ஊடாக சமூகத்திற்குத் தேவையான இஸ்லாமிய அறிவையும் சிந்தனையையும் வழங்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஊர் மட்டத்தில் இயங்கும் தனது கிளைகள்; ஊடாக சிறுவர் முதல் முதியோர் வரை இஸ்லாத்தைக் கற்பதற்கும், அதனைச் செயற்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை  கொண்டு இயங்குகின்றது. அல்-குர்ஆனைக் கற்றல், சமூக ஒற்றுமை, கூட்டு ஸக்காத், பண்பாடுகளோடு வாழ்தல், உள்ளத்தைப் பண்படுத்தல், உலகத்திலும் மறுமையிலும் வெற்றிபெறல் ஆகியன ஜமாஅத்தே இஸ்லாமி சமூகமயப்படுத்திய சிந்தனைகளில் சிலவாகும். 


1960-1980களில் இலங்கை முஸ்லிம்களில் உலகக் கல்வியைக் கற்றவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்குமிடையில் ஓர் இடைவெளி இருந்துவந்ததை அவதானிக்க முடிகின்றது. ஒருகட்டத்தில் அவர்கள் மதத்தை மறுக்கின்ற மாற்று சிந்தனைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் சூழல் காணப்பட்டது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வஹியை அறிவோடு இணைத்து இஸ்லாத்தை தத்துவார்த்தமாக முன்வைத்த முறை, ஆன்மீகத்தை வலியுறுத்தி உலகத்தை புறக்கணிக்காத அதன் நடுநிலை சிந்தனை என்பவற்றால் படித்த வர்க்கம் இஸ்லாத்தோடு நெருங்குவதற்கும் சமூக மாற்றத்தில் பிரதான பங்காளர்களாக மாறுவதற்குமான வாய்ப்பும் சூழலும் உருவானது. 


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சமூக மேம்பாட்டுக்காக இந்நாட்டில் முன்வைக்கும் திட்டம் வாழ்வின் சகல மட்டங்களையும் அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கியாதாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். தனி மனிதன், குடும்பம், கிராமம், சமூகம், நாடு என்ற அனைத்து தளங்களையும் அது செயற்பாட்டுக்குரிய அலகுகளாக அடையாளப்படுத்துகின்றது. 


மேலும், சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என்பவை மேம்பட வேண்டும் என்ற சிந்தனையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்வைப்பதோடு அதற்கான செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்தகைய செயற்திட்டங்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி என்ற தனி நிறுவனத்தின் ஊடாக அன்றி சமூகமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பதை அது உறுதியாக நம்புகின்றது. எனவே, இத்தகைய இலக்குகளோடு செயற்படும் தனி மனிதர்களோடும் நிறுவனங்களோடும் இணைந்து பணியாற்றுவதை அது ஆத்மார்த்த திருப்தியாகவும் தேவையாகவும் உணர்கின்றது. 


பல்லினங்கள் வாழும் நாடு இலங்கை என்ற வகையில் சமூகங்களுக்கிடையில் பரஸ்பர நல்லெண்ணத்தையும், ஐக்கியத்தையும் வளர்ப்பதற்கான செயற்பாடுகளையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னெடுப்பதைக் காணலாம். சிங்கள, தமிழ் சமூகங்களுடான கலந்துரையாடல்கள், விஜயங்கள் என்பவற்றை அது செயற்படுத்தி வருவதோடு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களைக் களைவதற்கான பல்வேறு முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. 


அத்தோடு, நாட்டின் பொதுவான நலனுக்கான சூழல் பாதுகாப்பு, மனித உரிமை, சகலருக்கும் நீதி ஆகிய விடயங்களில் அது பல்வேறு தரப்பினரோடும் ஒத்தழைப்போடு செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். 


ஏழு தசாப்தங்கள் கடந்தும் ஓர் அமைப்பு நிலைத்து நின்று செயற்படுவதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. பல்வேறு கஸ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் இந்த நீண்ட பயணத்தை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கடந்து வந்திருக்கிறது. அதன் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்மாதம் (ஜூன்) 29ம் திகதி அதன் தேசிய அங்கத்தவர் மாநாடு பெரும் ஏற்பாடுகளுடன், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அதன் 1500ற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் மற்றும் 600ற்கு மேற்பட்ட பிரமுகர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற இருப்பது விசேட அம்சமாகும். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »